Skip to main content

நக்கீரன் இணையதள செய்தி எதிரொலி... நிரந்தர அர்ச்சகர் நியமனத்தால் பக்தர்கள் சந்தோஷம்!!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

Devotees happy with the appointment of a permanent priest

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை. கல்வராயன் மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் வெள்ளாறு பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கல்வராயன் மலையிலிருந்து புறப்பட்டு வரும் இந்த நதி இதன் கரைகளில் 12 ராசிகளுக்கு உரிய 12 சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. அதில் கடலூர் -பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் காரியானூர் அக்னீஸ்வரர், திருவாலந்துறை தோளிஈஸ்வரர், திருமாந்துறை ஜோதீஸ்வரர், சு. ஆடுதுறை குற்றம் பொருத்த ஈஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத ஈஸ்வரர், திருவட்டத்துறை அரத்துறைநாதர், கோட்டைக்காடு அகஸ்தீஸ்வரர், இப்படிப்பட்ட சிறப்புக்கள் பெற்ற கோவில்கள் உள்ளன. இதில் திருவட்டத்துறையில் அரத்துறை நாதர், அம்பாள் திரிபுரசுந்தரி ஆகியோர் அருளாட்சி செய்து வருகின்றனர்.

 

இக்கோயில் சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆகிய மூவரால் பாடல் பெற்ற தேவார திருத்தலம். இக்கோயிலில் அர்ச்சகராக நீண்ட காலம் பணிசெய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறைவனடி சேர்ந்தார் சாமிநாத குருக்கள். அதன்பிறகு நிரந்தரமான அர்ச்சகர் நியமிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் நிரந்தர அர்ச்சகர் கிடைக்காமல் அவ்வப்போது தற்காலிகமாக சில அர்ச்சகர்களை தேடி கொண்டுவந்து வழிபாடு செய்தனர். இப்படிப்பட்ட தேவார பாடல் பெற்ற இந்த திருத்தலத்தில் நிரந்தரமாக ஒரு அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி அறநிலையத்துறை அதிகாரிகள் சிவா என்கிற சிவக்குமார் என்பவரை நிரந்தர அர்ச்சகராக நியமனம் செய்துள்ளனர். அப்படிப்பட்ட இந்த ஆலயத்தின் கோவில் கொண்டுள்ள இறைவனின் திருவிளையாடல் சம்பவம் ஒன்று அது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.

 

Devotees happy with the appointment of a permanent priest

 

திருஞானசம்பந்தர் காலத்தில் அவர் சிறு குழந்தையாக இருந்தபோது சீர்காழி சிவன் கோவிலில் பாலுக்கு அழுத போது அம்பாள் அவருக்கு ஞானப்பால் கொடுத்து அவரை அதிசய குழந்தையாக மாற்றினார். அந்த குழந்தை அம்பாளையும் இறைவனையும் ஊர் ஊராகச் சென்று தனது ஞானத்தால் தேவாரப் பாடல்களாக மெய்யுருக பாடி வந்தார். அப்படி பாடுவதற்கு இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களுக்கு செல்லும் அந்த காலகட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லை. அதனால் அவரது தந்தை திருஞானசம்பந்தர் நடத்தி அழைத்துச் செல்வார். அவருக்கு கால் வலிக்கும் போது அவரை தனது தோளில் சுமந்து சென்று பாட வைப்பார். இது கண்ட இறைவன் சம்பந்தன் மீது பரிவு காட்ட விரும்பினார். அப்படி ஒரு முறை திருவட்டத்துறை அரத்துறை நாதர் அம்பாள் திரிபுரசுந்தரி ஆகியோரை தரிசிக்கவும் அவர்களை பற்றி பாடுவதற்காக தனது தந்தை தோளில் அமர்ந்தபடி திருவட்டத்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

 

அப்படி வரும்போது இறையூர் என்ற இடத்தின் அருகே வரும்பொழுது இரவு நேரம் நெருங்கி விட்டது. அதனால் அன்று இரவு திருஞானசம்பந்தரும் அவரது தந்தை மற்றும் அவருடன் வந்த சிவனடியார்கள் அனைவரும் இறையூரிலேயே தங்கி விட்டனர். மறுநாள் காலை திருவட்டத்துறை சென்று இறைவனைப் பாடுவது என முடிவு செய்தனர். அன்று இரவு திருவட்டத்துறை அரத்துறை நாதர் கோவில் தர்மகர்த்தாக்களின் கனவில் ஒரு காட்சி தோன்றியது. அதில் சிவபெருமான் அவர்களுக்கு காட்சி கொடுத்து அன்பர்களே திருஞானசம்பந்தன் சீர்காழியிலிருந்து சிறு குழந்தையாக நடக்கமுடியாமல் தனது தந்தையின் தோள் மீது அமர்ந்தபடி எம்மைப்பற்றி பாட இங்கு வந்து கொண்டிருக்கிறான். இன்று இரவு அவன் இறையூரில் தங்கியுள்ளான். நீங்கள் காலையில் எழுந்ததும் எமது ஆலயத்திற்க்கு செல்லுங்கள் அங்கே முத்துச்சிவிகை முத்துக்குடை முத்து மோதிரம் ஆகியவை உள்ளன.

 

Devotees happy with the appointment of a permanent priest

 

அவைகளை எடுத்துச் சென்று அந்த சிவிகையில் திருஞான சம்பந்தனை அமரவைத்து முத்துக் குடை பிடித்து முத்து மோதிரம் அணிவித்து இங்கு அழைத்து வந்து எம்மைப்பற்றி பாட செய்யுங்கள் என்று கூறி மறைந்துவிட்டார். காலையில் எழுந்ததும் தன் கனவில் மட்டுமே இறைவன் தோன்றி கூறியதாக எண்ணிக்கொண்டு மற்ற தர்மகர்த்தாக்களிடம் ஒரு தர்மகர்த்தா சென்று தாம் கண்ட கனவை பற்றி கூறியுள்ளார். அப்போது அவரும் இதே போன்ற கனவு கண்டதாக கூறினார். இதே போன்று அனைத்து தர்மகர்த்தாக்கள் கனவிலும் இறைவன் தோன்றி கூறியதை அறிந்தனர். இறைவனின் திருவிளையாடலை எண்ணி அவர்கள் மெய்சிலிர்த்தனர். தர்மகர்த்தாக்கள் ஒன்று சேர்ந்து  சென்று கோயிலை திறந்து பார்த்தன என்னே அதிசயம் இறைவன் கனவில் கூறியது போன்றே கோயில் உள்ளே முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்திரைச் சின்னம் ஆகியவை இருந்தன.

 

தர்மகர்த்தாக்கள் அனைவரும்  கிராம மக்களுடன் அவைகளை எடுத்துக்கொண்டு திருஞானசம்பந்தரை சந்தித்து அழைத்து வருவதற்காக புறப்பட்டனர். அன்று அதிகாலை இறையூரில் தங்கியிருந்த திருஞானசம்பந்தரும் அவரது தந்தை மற்றும் சிவனடியார்கள் அங்கிருந்து புறப்பட்டு திருவட்டத்துறை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இப்படி எதிர் எதிரே இரு தரப்பினரும் சந்தித்து கூடினர். அந்த இடம் தற்போது கூடலூர் என்ற பெயரில் ஒரு ஊரே அமைந்ள்ளது. அதே இடத்தில் திருஞானசம்பந்தரை முத்துச் சிவிகையில் அமரவைத்து திருவட்டத்துறை அழைத்து வந்தனர். இங்கு வந்து அவர் இறைவனையும், அம்பாளையும் போற்றி பாடி வழிபட்டு சென்றார். இதை நினைவு கூறும் வகையில் தற்போதும் ஒவ்வொரு மாசி மாத மக உற்சவத்தின்போது  திருவட்டத்துறை கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்று இறையூரில் உள்ள தாகம் தீர்த்தபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து உற்சவரான திருஞான சம்பந்தரை அதில் அமர வைத்து திருவட்டத்துறை ஆலயத்திற்கு கொண்டு வருகிறார்கள். இங்கு திருஞானசம்பந்தருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

 

Devotees happy with the appointment of a permanent priest

 

மாசிமகத் திருவிழா முடியும் வரை இங்கே இருந்துவிட்டு விழா முடிந்த பிறகு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறார் திருஞானசம்பந்தர். இந்த நிகழ்வு ஆண்டுதோறும் மாசிமக உற்சவத்தின்போது நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட தேவாரப் பாடல் பெற்ற இக்கோயில் இறைவன் அரத்துறை நாதர், அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் ஆலயத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து தெய்வங்களையும் அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளையும் முறையாக செய்வதற்கும் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இன்முகம் காட்டி இறை உணர்வோடு உரிய வேத மந்திரங்களை முழங்கி அர்ச்சனை ஆராதனை உட்பட அனைத்து வழிபாட்டுமுறைகளையும் வேத ஆகம முறைப்படி செய்து வருகிறார் கோயில் அர்ச்சகர் சிவா என்கிற சிவக்குமார்.

 

எனவே பக்தர்கள் எந்த நேரத்தில் அவரைதொடர்பு கொண்டாலும் உரிய ஆலோசனைகளையும் வழிபாட்டு முறைகளையும் பூஜைகள் எப்படி செய்ய வேண்டும், அதற்கு என்னென்ன தேவை என்பதை எடுத்துக்கூறி அதன்படி வழிபாடுகளை செய்து வருகிறார். சிவகுமார் அவர்களைதொடர்பு கொள்ள வேண்டிய எண்; 9629321252 -திருவட்டத்துறை வாருங்கள் அரத்துறை நாதர் அம்பாள் திரிபுரசுந்தரி ஆகியோரை தரிசனம் செய்து அருள் பெற்று செல்லுங்கள் என்கிறார்கள் திருவட்டத்துறை கிராம மக்கள் மற்றும் சிவனடியார்கள்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்