Skip to main content

பொலி காளைகளுக்கு ஆபத்து! ஜல்லிக்கட்டுக்கும் ஆபத்து! -எடப்பாடி அரசின் புதிய திட்டம்!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

“ஆட்டை ஆசையா வளர்க்கிறதே அதன் கழுத்தை அறுக்கத்தான்.. கிராமத்துல இப்படி ஒரு பழமொழி சொல்வாக... அதைப் போலத்தான் ஜல்லிக்கட்டுல மாடு பிடிச்சவனுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும் காரைப் பரிசாகக் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொலி காளைகளே இல்லாத நிலைமைக்கு தமிழகத்தைக் கொண்டுவர ஒரு சட்டத்தையே போட்டிருக்கிறாராமே..” என்று நம்மிடம் விசனப்பட்டார் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த குருநாதன்.

‘என்ன சொல்ல வர்றீங்க?’ என்று அவரிடமே கேட்டோம்.

 

Danger for Polly bulls! Danger of Jallikattu! - eps government's new plan!


"எங்க அப்பாரு காலத்தில இருந்து ஆடு, மாடு வளர்க்கிறோம். மாட்டுக்கு முடை (இனப் பெருக்கத்துக்கான அறிகுறி) அடிச்சதுன்னா.. மேலத் தெரு பெரிய வீட்டுல கட்டியிருக்கிற பொலி காளைகிட்ட கூட்டிப் போய் விடுவோம். 2 தடவை மேல விழுந்துச்சுன்னா. சினை பிடிச்சிடும். மாட்டுக்காரருக்கு பத்தோ, இருபதோ கொடுத்திட்டு வந்திருவோம்.

அதிலும்,  சினை பிடிக்கலைன்னு மறு மாசம் கத்தும், ஒரு நெக்குல (இடத்தில்) நிக்காது. பக்கத்து ஊர்ல இருக்கிற டவுன் ஆஸ்பத்திரிக்குப் போயி.. சினை ஊசி போட்டா சினை பிடிச்சுக்கும். அதுலயும் பிடிக்கலைன்னா மறுபடியும் காளை மாட்டுகிட்ட விடுவோம். இப்ப என்னடான்னா பொலி காளை வளர்க்கிறதுக்குன்னு அரசாங்கம் தனிச் சட்டம் போட்டிருக்காமே? அதுல பதிவு பண்ணாட்டி ஆயிரக்கணக்கில அபராதம் போடுவாங்களாமே?" என்று எதிர்கேள்வி கேட்டார்.  

கால்நடை விவசாயியான முருகன் படித்தவரும்கூட.  “அரசாங்கத்த பகைச்சிக்க முடியாது. போட்டோவெல்லாம் வேணாங்க..” எனச் சொல்லிவிட்டு “அதாவது, மாடுகளின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள சட்டம் கடந்த ஆண்டே அமலுக்கு வந்துவிட்டது. இந்தப் புதிய சட்டத்தின் படி, கால்நடைத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும். ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன் போன்ற வெளிநாட்டு மாட்டு இனங்களை வளர்க்கும் விவசாயிகள், பாரம்பரியமான காளைகளான பூச்சிக் காளைகளையோ, பொலி காளைகளையோ வச்சிருக்கக்கூடாது.

 

Danger for Polly bulls! Danger of Jallikattu! - eps government's new plan!


ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன் மாட்டினங்களை குளிர் பிரதேசங்களிலும்,ஜெர்சி மாடுகளை சமவெளிப் பகுதிகளில் மட்டும் தான் வளர்க்க வேண்டும். அதுவே, நாட்டு பசுக்களை வைத்திருப்பவர்கள், காளைகளை வளர்த்துக் கொள்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்ல. ஆனால்.. அந்தக் காளைகளை அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். பதிவு செய்யாவிட்டால், ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை அந்தக் காளை உடற்தகுதியுடன் இல்லாத பட்சத்தில், அந்தக் காளைகளை அரசாங்கமே கொன்றுவிடவும் சட்டத்துல இடமிருக்கு.  

இது மாடுகளின் இனப்பெருக்கத்திற்கு சினை ஊசிகள் மட்டும் தான் தீர்வுங்கிற அவல நிலையை நோக்கித் தள்ளும் நடவடிக்கைன்னுதான் சொல்ல முடியும்.  அதேபோல் கால்நடை மருத்துவமனைகளில் போடப்படும் சினை ஊசிகளால் பெண் கன்று மட்டுமே பிறக்குமாம். இதனால் இனி ஜல்லிக்கட்டு காளைகளே இல்லாத நிலை உருவாகி விடும்" என கால்நடை விவசாயிகளின் சார்பாகப் பேசினார்.

இதுதொடர்பாக கால்நடைத் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "அதிக பால் உற்பத்தி என்ற இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். வெளிநாட்டு மாட்டு இனங்கள் அதிக பால் கொடுக்கக்கூடியவை. நாட்டு மாடுகளால் அதிக பால் கொடுக்க முடியாது. அதனால், அவற்றைத் தவிர்த்து, வெளிநாட்டு மாடுகளின் மீது கவனம் செலுத்தப்போகிறோம். அதிலும், சினை ஊசி வகைகளை இரண்டாகப் பிரித்திருக்கிறோம். ஒன்று பெண் கன்று மட்டுமே பிறக்கும் சினை ஊசி. இரண்டாவது, இப்போது நடைமுறையில் இருக்கும் ஊசி. எது யாருக்கு வேண்டுமோ, அதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.

ஆக, சினைக்கு போடும்போதே பிறக்கப் போவது பெண் கன்றுதான் என தெரிந்துவிடும். அப்புறம் எப்படி  இனி ஜல்லிக்கட்டு காளைகளை உருவாக்க முடியும்? நாட்டு மாட்டு இனத்தை மெல்ல மெல்ல அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது எடப்பாடி அரசு. இது நல்லதற்கா?

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.