ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி இருந்தார். இதனையடுத்து திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டன. இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை எனத் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் சார்பில் அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், “உணவுப் பாதுகாப்புத் துறையிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருப்பதி தேவஸ்தான ஆய்வகத்துக்கு ஏற்கனவே மாதிரிகள் அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக அங்குள்ள ஆய்வகம் சோதனைகளை நடத்தியது. இதில் எவ்வித முறைகேடுகள் இல்லை எனத் தெரியவந்தது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அனுப்பப்பட்ட நெய்யில் குறைபாடுகள் இருப்பதாக வதந்தி பரவியது.
ஆனால் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் அக்மார்க் அதிகாரிகள் பார்வையிட்டு, மாதிரிகள் சேகரித்து, எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் நெய் தூய்மையானது எனத் தெரிவித்தனர். எங்களிடம் அதற்கான மாதிரிகள் உள்ளன. யார் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பும் எந்த ஆய்வகத்திலும் சோதனைகளை நடத்த அழைக்கிறோம். ஏ.ஆர். நிறுவனத்தின் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குத் தொடர்ந்து பால் உணவுகள் மற்றும் நெய்யை ஜூன், ஜூலை வரை சப்ளை செய்து வந்தோம். ஆனால், தற்போது திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு நெய் வழங்குவதில்லை. நெய் தயாரிப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள எங்களுக்கு இதுநாள் வரை எந்த புகாரும், பிரச்சனையும் வரவில்லை” எனத் தெரிவித்தார்.
அதே சமயம் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஆந்திராவில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதனைத் திசை திருப்பவே எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ், “திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாத லட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உண்மைதான்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.