Skip to main content

‘போலி மருத்துவரால் இளைஞர் உயிரிழப்பு?’ - காவல் நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்!

Published on 23/10/2024 | Edited on 23/10/2024
Cuddalore dt Chidambaram Mayavan son Kavimani incident

போலி மருத்துவர் ஊசி போட்டதால், இளைஞர் உயிரிழந்துவிட்டதாகப் புகார் தெரிவித்து அவரது உறவினர் மற்றும் கிராம மக்கள் காவல் நிலையத்தில் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு மேல திருக்கழிப்பளை சின்ன தெருவைச் சேர்ந்த மாயவன் மகன் கவிமணி (வயது 22). இவர் காய்ச்சல் ஏற்பட்டதால் தனது தாயாருடன் சிதம்பரம் மந்தக்கரை பகுதியில் உள்ள சித்த மருத்துவம் பார்க்கும் பாலு கிளினிக் நடத்தி வரும் சரவணன் என்பவரிடம் சென்று ஊசி போட்டுள்ளார். அதன் பின்னர் தனது கிராமத்திற்குச் செல்லும் வழியில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால், அவரை உடனடியாக சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு வாலிபர் கவிமணியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் கவரப்பட்டு பொதுமக்கள் சிதம்பர நகரக் காவல் நிலையத்தில் திரண்ட போலி மருத்துவரைக் கைது செய்ய வேண்டும், உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்