Skip to main content

“மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் இ.பி.எஸ்.”- முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/10/2024 | Edited on 23/10/2024
CM MK Stalin says Edappadi Palaniswami is went to Salem when it rained 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் பேரனும், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரியின் மகனுமான கோ. ஸ்டாலின் - யுவஸ்ரீ ஆகியோரது திருமணம் இன்று (23.10.2024)  நடைபெற்றது. இந்த திருமணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் க. பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் எனப் பலரும் உடண் இருந்தனர்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சென்னையில் மழை வந்தது. முதலமைச்சராக நான் வந்தேன். துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அமைச்சர்கள் வந்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். அதேபோல, ஊராட்சி, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சியில் இருக்கக்கூடிய பிரதிநிதிகள் அத்தனைப்பேரும் மக்களைத் தேடி வந்தார்கள். குறைகளைக் கேட்டார்கள். பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள். இது தி.மு.க. ஆனால், மழை வந்தவுடன் சேலத்திற்குச் சென்று பதுங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி.

CM MK Stalin says Edappadi Palaniswami is went to Salem when it rained 

அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார். ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் வரமாட்டார். ஏதோ கனவு கண்டிருக்கிறார். அதற்காக ஜோசியம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். திமுகவைப் பொறுத்தவரைக்கும், கூட்டணி என்று சொன்னால், அது கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல, மக்கள் கூட்டணியாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. கனவு காணவேண்டாம். உறுதியாகச் சொல்கிறேன். 2026இல் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகம் இருக்க வேண்டியதில்லை” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்