சென்னை திருவல்லிக்கேணியில் முதியவர் ஒருவரை சாலையில் சென்று கொண்டிருந்த மாடு முட்டித் தூக்கி வீசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிய நிலையில், பல்வேறு தரப்பினரும் இவ்வாறு சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து அடைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வடக்கு மாட வீதியில், நேற்று காலை சுந்தரம் என்ற முதியவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த காளை மாடு ஒன்று முதியவர் சுந்தரத்தை முட்டித் தூக்கி வீசியது. காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை மாடு முட்டி வீசும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தகவலறிந்து அங்கு சென்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் 17 மாடுகளை இதுவரை பிடித்துள்ளனர். இதில் முதியவர் சுந்தரத்தை மூட்டித் தூக்கி வீசிய கிர் ரக காளை மாடும் பிடிபட்டிருக்கிறது. இந்த மாடு கோவிலுக்குச் சொந்தமான மாடு என்று நேற்று தகவல் வெளியாகி இருந்த நிலையில், கோயில் நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. இந்நிலையில் பிடிக்கப்பட்ட அந்த மாட்டை காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலைக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.