Skip to main content

நியமன எம்.எல்.ஏக்கள் குறித்த நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
high court


புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து கடந்த ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்ததையடுத்து, எந்தவித அறிவிப்புமின்றி மூவருக்கும் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதேசமயம், ஆளுநரின் நியமனத்தை தடைவிதிக்கக்கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மி நாராயணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்யக்கோரி தனலட்சுமி என்பவரும் பொது நல வழக்கு தொடர்ந்தார். பேரவைக்குள் அனுமதிக்கக்கோரி நியமன எம்.எல்.ஏ-க்கள் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோரும் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த மூன்று வழக்குகளையும் விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு நேற்று ‘‘மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்’’என்று தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. "இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்வோம்" வழக்கு தொடுத்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி,

"நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு தொடர்பான முழு விவரமும் அறிந்து தான் கருத்து கூற முடியும், இது தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து அதன் பின்னர் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.

அதேசமயம் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,

"புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம் சட்ட விதிகளின் படி மத்திய அரசு நியமித்தது. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் தீர்ப்பு. இது தொடர்பாக எவ்வளவு விரைவாக சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்து நடவடிக்கை அமையும்" என கூறினார்.

நியமன எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு விவகாரம் மீண்டும் புதுச்சேரி அரசியலை சூடு பிடிக்க வைத்துள்ளது.

சார்ந்த செய்திகள்