Skip to main content

ஹெர்குலஸ் சைமன் உடலை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க கோர்ட் உத்தரவு..!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

Court orders Hercules Simon's body to be exhumed and buried in Kilpauk Cemetery

 

கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த  நரம்பியல் மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்றபோது தகராறு ஏற்பட்டது. பின்னர் வேலாங்காடு இடுகாட்டில் சென்னை மாநகராட்சி அடக்கம் செய்தது. 

 

அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வழக்குகள் டி.பி.சத்திரம், அண்ணா நகர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

 

இந்நிலையில், வேலாங்காட்டிலிருந்து கணவரின் உடலைத் தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி மனைவி ஆனந்தி, சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதைப் பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்து மே 2ஆம் தேதி உத்தரவிட்டார்.

 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று (03.04.2021) தீர்ப்பளித்துள்ள நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலாங்காடு மயானத்திலிருந்து மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். உரிய நடைமுறைகள் பின்பற்றி உடலை அடக்கம் செய்யவும், அதற்குத் தேவையான பாதுகாப்பை காவல்துறை தரவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த நடைமுறைகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்