
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, உச்சிமேடு அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி, அவரது மனைவி பாக்கியம்மாள் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல அரசியல் கட்சியினரும் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கொலை நடந்த வீட்டிற்கு மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில் குமார், டி.ஐ.ஜி சசிமோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் நடந்த பின் கடந்த மூன்று தினங்களாக போலீசாரின் கட்டுப்பாட்டில் தம்பதிகள் வசித்த வீடு இருந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இதேபோல ஆறு மாதங்களுக்கு முன்பு முதிய தம்பதி இருவர் மற்றும் மகன் உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் கொங்கு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த பகுதியில் தோட்டங்களில் தனியாக உள்ள வீடுகளில் வசித்து வரும் முதியவர்கள் குறித்த கணக்கெடுப்பை போலீசார் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு சிவகிரியில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில் பொதுஇடங்களில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை பதிவான காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் என ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.