சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை மார்ச் 22ஆம் தேதி மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்றும் கரோனாவுக்கு தடுப்பு மருந்தோ, முன்கூட்டியே அறியும் வசதியோ இதுவரை இல்லை என்பதால் மக்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்தை அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், "கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது. அது மூன்றாவது நிலைக்கு போய்விடக்கூடாது. வெளியில் இருக்கும் கரோனா வைரஸ் 12ல் இருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தாலே, நாடு மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் மோடி நாளை சுய ஊரடங்கு உத்தரவு கொடுத்துள்ளார். கரோனா பரவுதலை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே மக்கள் இருக்க வேண்டும். சுயஊரடங்கின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.