
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை நிகழ்வுக்கு பின் இன்று (21.03.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஊடகத்தின் வாயிலாக மீண்டும் தெரியப்படுத்த விரும்புகிறேன். பெட்ரோல், மதுபான விற்பனை மூலம் 2025-26ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 930 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இது 2020-21 ஆம் ஆண்டுகளை விட சுமார் 81 ஆயிரத்து 431 கோடி ரூபாய் அதிகமாக உள்ளது.
ஜி.எஸ்.டி., பத்திரப்பதிவு, கலால் வரி, வாகன வரி என மாநில அரசாங்கத்தினுடைய வரியிலிருந்து வந்த வருவாய் இப்படி, மாநில அரசினுடைய வரியிலிருந்து வந்த வருவாய் 2020-21ஆம் ஆண்டுகளை விட சுமார் ஒரு லட்சத்து ஓர் ஆயிரம் கோடி 2025-26இல் கூடுதலாகக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு மத்திய அரசின் வரிப்பகிர்வு 33 ஆயிரம் கோடி கூடுதலாக வருகிறது. அதிமுக ஆட்சியை விட 2025-26இல், திமுக ஆட்சியில் கூடுதலாக 33 ஆயிரம் கோடி மத்திய அரசினுடைய வரி பகிர்வு கிடைக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
மாநில வருவாய் மத்திய அரசின் வரி பகிர்வு என இரண்டையும் கணக்கிட்டால் சுமார் ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி அரசுக்குக் கிடைக்கிறது. இதில் கடன் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி வாங்குவதாகத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்தால் இரண்டு லட்சத்து 39 ஆயிரம் கோடி இருக்கிறது. இதில் மூலத் தான செலவு எனப் பார்க்கும் பொழுது வெறும் 57 ஆயிரம் கோடி தான் மூலதனம் செய்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டு முடிந்த பிறகு தான் எவ்வளவு செலவு என்பது தெரிய வரும். ஆனால் இந்த அரசாங்கம் கணித்தது இந்த ஆண்டு 57 ஆயிரம் கோடி மூலதன செலவு செய்யப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
அதனைக் கழித்துப் பார்த்தால் ஒரு லட்சத்து 82 ஆயிரம் கோடி. இந்த ஒரு லட்சத்து 82 ஆயிரம் கோடியில் இன்றைய தினம் நிதி அமைச்சர் பெண்களுக்கு உரிமைத் தொகை கொடுப்பதாகச் சொன்னார். அதில் ஒரு 14 ஆயிரம் கோடி போனால் மீதம் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி கடன் மற்றும் வருவாய் வரவு இரண்டும் சேர்ந்து மீதி இருக்கிறது. இதில் என்ன ஒரு பெரிய திட்டத்தை இந்த அரசு கொண்டுவரப் போகிறது. எதையுமே தெரிவிக்கவில்லை. எல்லாவற்றையும் மூடி மறைத்து ஏதேதோ புள்ளி விவரத்தைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற அரசாகத்தான் பார்க்கப்படுகிறது. கடன் மேல் கடன் வாங்கி இன்று தமிழ்நாடு மக்கள் மீது மிகப்பெரிய கடனை சுமத்தியது தான் இந்த ஆட்சியின் சாதனை'” எனத் தெரிவித்தார்.