Skip to main content

கரோனா ஊரடங்கு விதியை மீறிய மூன்று பிரபல கடைகளுக்கு சீல்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
Sealed to popular stores

 

பிரபல ஜவுளி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு கும்பகோணத்தில் உள்ள நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் நடைமுறையிலுள்ள பொது முடக்கத்தில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. அதில் நிறுவனங்கள், கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், குறைந்த அளவிலான பணியாளர்களை அனுமதித்தல், குளிர் சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதோடு வாடிக்கையாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளையும் செய்து வைத்திருக்க வேண்டும். 

ஆனால் மேற்கண்ட எந்த விதிகளையும் பின்பற்றாமலும், எவ்வித பாதுகாப்பும் இல்லாமலும் இயங்கியதால், வாடிக்கையாளர்களுக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் என்பதால் மூன்று கடைக்கு கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக சீல் வைத்தனர்.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் அருகே உள்ள பிரபல ஜவுளி கடை, நாகேஸ்வரன் வீதியில் உள்ள முன்னணி எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் கடை மற்றும் 10 ரூபாய்க்கு பொருட்களை விற்கும் பிளாஸ்டிக் கடைகள் என விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மூன்று கடைகளுக்கு நகராட்சி ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

முதல்வரின் உத்தரவு; ஆய்வுக்குப் பிறகு 59 கடைகளுக்கு சீல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
59 shops sealed for selling banned tobacco products in Erode

முதல் - அமைச்சர் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம், போலீசார், பொதுப்பணித்துறை ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் பள்ளி கல்லூரி அருகிலும், கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கலெக்டர் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் குழு ஆய்வு மேற்கொண்டதில் 59 கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 59 கடைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டு ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை, சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையினர் கொண்ட குழுவினர் முன்னிலையில்  வெண்டிபாளையம் மாநகராட்சி உரக்கடங்கில் அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 956 ஆகும். பொதுமக்கள் உணவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தெரிவித்துள்ளார்.