உத்தர பிரதேசத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் ஹத்ராஸ் மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவளது உடலை ஈமக்கிரியைகள் செய்வதற்குக் கூட அவளது பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் போலீசாரே இரவோடு இரவாகத் தகனம் செய்தது கொடுமை மட்டுமல்ல மனித உரிமை மீறலின் உச்சம்.
அந்த இளம் பெண்ணின் குடும்பத்தார்களைச் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக அகில இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அவருடைய சகோதரி, காங்கிரசின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களை கிரேட்டர் நொய்டா நெடுஞ்சாலையின் பாரி சவுக் என்ற பகுதியில் வழி மறித்த உ.பி. போலீசார் 144 தடை உத்தரவைச் சுட்டிக் காட்டி அவரை அங்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போலீசார் அவரை அருகிலுள்ள முட்புதரில் தள்ளிவிட அதில் அவர் விழுந்திருக்கிறார். கட்சியினர் மற்றும் அவரின் பாதுகாவலர்கள் அவரை மீட்டனர். பின்னர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து தென்காசி மாவட்டத்தின் சுரண்டை நகரில் மாவட்ட காங்கிரசின் தலைவர் பழனி நாடார் தலைமையில் பொறுப்பாளர்களான நகர தலைவர் எஸ்.கே.டி. ஜெயபால், துணை தலைவர் சண்முகவேல், வட்டாரத் தலைவர் முருகையா உள்ளிட்ட பொறுப்பாளர்களோடு நேற்று மாலை திரண்ட காங்கிரசார் அங்குள்ள அண்ணா சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கண்டித்துக் கடுமையான கோஷங்களை எழுப்பினர். அது சமயம் திடீரென்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவ பொம்மையை எரித்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பாகியிருக்கிறது.