
கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. கரோனாவால் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் உயிரிழந்துள்ள நிலையில், 70,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் சில தளர்வுகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, 4ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் எம்.பி. கார்த்தி சிதம்பரம், "ஊரடங்கை நீட்டிப்பது சரிவராது. நீட்டித்தால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கரோனாவை தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் திறம்பட முடிவெடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், சாதாரண மக்கள், சிறு தொழில் செய்வோர் கையில் பணத்தை அரசு கொண்டு சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.