லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்திற்கு, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர், கடந்த 3ம் தேதி கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனுக்களை, கோவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து ஜாமீன் கோரி கணபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் உடல் ஆரோக்கியம் மோசமாகி விட்டதாகவும், ஜாமீன் வழங்கினால் நீதிமன்றத்தின் பிடியில் இருந்து தப்பிப்போகமாட்டேன் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கணபதிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவர் விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை மாலை ஆஜராக வேண்டும். பாஸ்போர்ட் விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். கோவையை விட்டு வெளியே செல்ல கூடாது உள்ளிட்ட நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.