தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே அரசுக்கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, 200- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், கூலித் தொழிலாளியான தாய் வளர்ப்பில் கல்லூரியில் படித்து வந்தார் இந்து பிரியா. பிரபல பல்கலைக்கழகத்தில் பி.காம் முதல் வருடம் படித்து வந்தார். கடந்த மார்ச் 8- ஆம் தேதி கல்லூரியில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் செல்போனை உபயோகப்படுத்தக் கூடாது என்று பி.காம் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அந்த துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சியில் மற்றத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் இந்து பிரியா என்ற மாணவியும் புகைப்படம் எடுத்ததாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டியதாகவும், மேலும் மன்னிப்பு கடிதம் நிர்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி இந்து பிரியா, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவியின் உறவினர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மாணவி தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.