Published on 17/10/2020 | Edited on 17/10/2020

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் மாவட்ட தலைமையிடம் அமைக்க 35.1 ஏக்கர் பரப்பளவு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், பத்தரை ஏக்கர் பரப்பளவில் ஆட்சியர் அலுவலகம், மூன்றரை ஏக்கரில் எஸ்.பி அலுவலகம், 5 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் 8 ஏக்கரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக 104 கோடி ரூபாய் மதிப்பில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது தேதி மாற்றப்பட்டு வரும் 23ஆம் தேதி காலை 9:45 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து காணொளி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள், ஆட்சியர் கிரண் குராலா மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.