Skip to main content

‘உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்! 

Published on 05/09/2024 | Edited on 05/09/2024
 CM MK Stalin insistence for Proper action should be taken

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (05.09.2024) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆழமாகப் பாதிக்கும் கவலைக்குரிய விஷயத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் (பதிவு எண் : IND-TN-08-MM-1418) இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. இருப்பினும் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 21-07-2024 அன்று IND- TN-12-MM-5900 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 03-09-2024 அன்று 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும். எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர்களைத் தாயகத்திற்குத் திரும்பி அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்