Skip to main content

வருவாய் உதவியாளர் தேர்வு! வருமானம் பார்க்கும் வசூல் முருகன்! - பொறியியல் பட்டதாரிகளே உஷார்!

Published on 17/04/2018 | Edited on 17/04/2018
murugan sm


வி.ஏ.ஓ., துப்புறவு உள்ளிட்ட குரூப்-4 பணிகளுக்குக்கூட விண்ணப்பிக்கும் அளவுக்கு பொறியியல் பட்டதாரி மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறிவிட்டது. காரணம், வேலையில்லா ‘பொறியியல்’ பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான். ஆனால், வருவாய் உதவியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கக்கூடாது என்ற 1984 தமிழக அரசின் ஆணையால் பொறியியல் பட்டதாரிகள் வருவாய் உதவியாளர் பணிக்கு வரமுடியவில்லை என்ற வேதனைக்குரல் பொறியியல் பட்டதாரிகளின் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதைப்பயன்படுத்தி, வழக்குப்போடலாம் என்று வசூல்வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறார் முருகன் என்கிறக்குற்றச்சாட்டு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்தே ஆடியோ ஆதாரங்களுடன் புகார் வர விசாரணையில் இறங்கினோம்…

 

mkurugan



“வழக்குச்செலவுக்காக முருகனுக்கு உதவி செய்யுங்கள்” சமூக வலைதளங்களின்மூலம் பிரச்சாரம் செய்த பிரபல ரேடியன் ஐ.ஏ.எஸ். அகடெமியின் நிறுவனர் ராஜபூபதியிடம் கேட்டபோது, “டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் 50 சதவீதம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. ஆனா, எப்போதோ போடப்பட்ட ஜி.ஓ.வால் பொறியியல் பட்டதாரி மாணவர்கள் வருவாய் உதவியாளர் போஸ்டிங்குக்கு விண்ணப்பிக்கமுடியாமல் வேலைகிடைக்காமல் திண்டாடிவருகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உதவி செய்யுங்க என்று என்னைப் பார்க்க வந்தார் இளைஞர் முருகன். அவர், பொறியியல் பட்டதாரி என்பதாலும் மாணவர்களின் நலனுக்காக போராடுகிறார் எனவும் நம்பித்தான் அவருக்கான பண உதவி செய்யுங்கள் என்று சமூக வலைதலங்களின் மூலம் பரிந்துரை செய்தேன். நிறைய மாணவர்கள் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்கள் வைத்திருப்பவர்களும் முருகனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து உதவினார்கள். வழக்கு தொடுத்தேன் என்றாரே தவிர, அதில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆனா, எந்த முன்னேற்றமும் இல்ல. அந்த பையன் மேல இப்போ எனக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது” என்று வருத்தப்பட்டார்.

 

Raja



முருகன் குறித்து நாம் மேலும் விசாரித்தபோது, “திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில படிக்கும்போதே, ‘நான், தைலாபுரத்துலதான் வளர்ந்தேன்… ராமதாஸுக்கு தூரத்து சொந்தம்’னு சொல்லிக்கிட்டு கல்லூரி நிர்வாகத்தை ப்ளாக்மெயில் பண்ணிக்கிட்டு ஃபீஸ் கட்டாததால சர்ச்சைக்குள்ளானவர். அதற்கப்புறம், சென்னை அண்ணாநகரில் தங்கி டி.என்.பி.எஸ்.சிக்கு படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்லிக்கிட்டு… பல அரசியல் தலைவர்களைப் போயி சந்திச்சு சால்வை போத்தி ஃபோட்டோ எடுத்துக்கிட்டு அதைவெச்சு வசூல் பன்றதுதான் முருகனின் வேலை. பொறியியல் மாணவர்களின் பிரச்சனைகளை பத்திரிகைகளில் செய்திவெளியிடச்சொல்லி பத்திரிகையாளர்களை நண்பர்களாக்கிக்கொண்டு ப்ளாக்மெயில் செய்வதோடு கமிஷனர் ஆஃபிஸில் பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டும் திரிகிறார். இவரை, நம்பி பணம் கொடுத்த பொறியியல் பட்டாதாரிகளோ ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். டிஎன்பிஎஸ்சி ஊழல் குறித்து பா.ம.க தொடர்ச்சியாக போராடி குரல் கொடுத்து வருகிறது.
 

பிஇ


இந்நிலையில் திடீரென்று, பா.ம.க. அன்புமணியை பார்ப்பது, பிறகு வேல்முருகனை பார்ப்பது அப்படியே திருமாவளவனை பார்த்ததும் அன்புமணி மற்றும் வேல்முருகன் குறித்து திருமாவளவனிடம் பேசுவது என்று ‘உளவாளி’ வேலை பார்த்துக்கொண்டு எல்லாவற்றையுமே தனக்கான ஆதாயத்துக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். வருவாய் உதவியாளர் பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுக்கு நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்கப்போகிறேன் என்றுதான் வசூலிக்க ஆரம்பித்தார். ஆனால், 2018 ஜனவரி-22 ந்தேதி கலந்தாய்வு முடிந்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. இரண்டுமாத காலம் ஆனபிறகு மீண்டும் வசூல் வேட்டையை நடத்திவருகிறார். இப்படி, வசூல் செய்த பணத்தைவைத்தே இன்னும் நீதிமன்றத் தடை வாங்காத முருகன், இன்னும் இரண்டு வழக்குகளுக்கு பண வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டார். அதாவது, குரூப்-1 தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 35- ஆக உள்ளது. இது, அரசின் கொள்கை முடிவு. இதில், நீதிமன்றம் தலையிடமுடியாது. ஆனால், 40 வயதாக்கவேண்டும் என்றும் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் போராடப்போவதாகவும் வசூலித்துவருகிறார்” என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
 

anbu


இதுகுறித்து, குற்றம்சாட்டப்பட்ட முருகனை தொடர்புகொண்டு கேட்டபோது, “பொறியியல் மாணவர்களின் வேலை வாய்ப்புக்காகத்தான் அனைத்து தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறேன். நான் எந்த கட்சிக்கும் சார்பானவன் அல்ல. என்னிடம் பணம் இல்லாததால் மாணவர்களிடம் வசூலிக்கிறேன். கடந்தமுறை, வழக்கு செலவுக்கு 20,000 ரூபாய் கூடுதலாக எனது கைக்காசை போட்டு நடத்தினேன். நான், வசூல் செய்து எனக்காக செலவு செய்துகொள்வதில்லை. வேண்டுமென்றே என் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்” என்றார் தன் தரப்பு விளக்கமாக.

யார் பணம் வசூலித்தாலும் எச்சரிக்கையாக இருங்கள்!
 

சார்ந்த செய்திகள்