Skip to main content

“மம்தாவின் உடல்நிலை குறித்து கவலைப்படுகிறேன்” - முதல்வர் ஸ்டாலின்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Chief Minister Stalin said Mamata needs to get well soon

 

மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 8 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மேற்கு வங்க முதல்வருமான வடக்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனை முடித்துவிட்டு நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் கொல்கத்தாவிற்குத் திரும்பினார். ஆனால் ஹெலிகாப்டர் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லாமல் வானிலை காரணமாக அவசர அவசரமாக செவோக் விமானப் படைத்தளத்தில் தரையிறக்கப்பட்டது.    

 

அப்போது முதல்வர் மம்தாவுக்கு காயம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதும் மம்தா அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் இடது முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட மம்தா இரவு வீடு திரும்பினார். மேலும் வீட்டில் ஓய்வு எடுக்க மம்தாவிற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

 

இந்த நிலையில் மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “ஹெலிகாப்டர் திடீரென அவசரமாக தரையிறங்கியதில் காயம் அடைந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தாவின் உடல்நிலை குறித்து கவலைப்படுகிறேன். அவர் விரைவில் குணமடையவும், விரைவில் நலமுடன் திரும்பி வரவும் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்