திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும் சின்னையகவுண்டன வலசில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை 2021 - 2022 அறிவிப்பு எண் 5இன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். புதிய கல்லுாரி வளாகத்தில், மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு பேசினார். அதில், “பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே இரண்டு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்பக் கல்லுாரி பழனி நகரில் இயங்கிவருகின்றன. அங்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகளவில் இருப்பதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம் .
அதன்படி , இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கல்லூாரியும், உயர்கல்வித்துறை சார்பில் ஆத்துார் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு கல்லூரியும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பழனியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் சித்தா கல்லூரி தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற 6 மாதங்களில் சின்னையகவுண்டன் வலசில் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கும் இந்தக் கல்லூரி, அடுத்தக் கல்வியாண்டு முதல் ஒட்டன்சத்திரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்படும். மேலும், தொப்பம்பட்டியில் உயர்கல்வித்துறை சார்பில் மேலும் ஒரு கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம் மற்றும் வேடசந்தூர் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல்லிற்கோ அல்லது 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழனிக்கோ சென்று உயர்கல்வி பயில வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி, ஒட்டன்சத்திரம் வட்டத்திலேயே கல்லுாரி அமைய ஆணைகள் வழங்கி, பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை முதல்வர் நினைவாக்கியுள்ளார். திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படவுள்ளது. திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டவுடன், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பழனியில் அமைக்கப்படவுள்ளது.
தொப்பம்பட்டியில் அனைத்து வசதிகளுடன் அரசு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. பரப்பலாறு அணை துார்வாரவும், விவசாய விளைபொருட்களை சேமிக்க குளிர்சாதன வசதியுடன் கிடங்கு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம், தடுப்பணைகள் என விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. பழனியில் பச்சையாறு அணை கட்டப்படவுள்ளது. குதிரையாறு, பாலாறு - பொருந்தலாறு, வரதமாநதி, நல்ல தங்காள் - நங்காஞ்சியாறு, குடகனாறு, சந்தன வர்த்தினியாறு ஆகிய 6 ஆறுகளை இணைக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுவருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமை பயன்படுத்தி படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்” என்று கூறினார்.
இந்த விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையாளர் நடராஜன், கல்லூரி முதல்வர் வாசுகி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் சத்தியபுவனா உள்ளிட்ட அதிகாரிகள், கட்சிப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.