Skip to main content

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு! எதிர்மனுதாரராக சிபிஐ- யை சேர்க்க திமுகவுக்கு அனுமதி! 

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் வகையில், சிபிஐ -யை எதிர்மனுதாரராகச் சேர்த்து, மனுவில் திருத்தம் செய்ய திமுகவுக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017- ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலின்போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

chennai rk nagar money distribution case dmk chennai high court

முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பணபட்டுவாடா தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் வைரக்கண்ணனும், பணப்பட்டுவாடாவைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என  திமுக வேட்பாளர் மருது கணேஷும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். 
 
இந்நிலையில், பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் வகையில், ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்ய அனுமதி கோரியும், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் செலவுத்தொகையை இழப்பீடாக வழங்கக் கோரியும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, சிபிஐ விசாரணை கோரும் வகையில், சிபிஐ- யை எதிர்மனுதாரராகச் சேர்த்து, மனுவில் திருத்தம் செய்ய திமுகவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. அதேசமயம், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளரால் செலவழிக்கப்பட்ட தொகையை இழப்பீடாக வழங்கக் கோரிய கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான பிரதான வழக்கு பிப்ரவரி 11- ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்