Skip to main content

வன்கொடுமை ஒழிப்புச் சட்டத்தின்மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்புமீது மத்திய அரசு உடனடியாக மறுசீராய்வு மனுதாக்கல் செய்யவேண்டும் :கி.வீரமணி 

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
sp

 

தாழ்த்தப்பட்ட மக்கள்மீது ஆதிக்க ஜாதியினர் நடத்தும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட நடைமுறையில் இருந்துவரும் வன்கொடுமை ஒழிப்புச் சட்டம்பற்றி உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு - குற்றங்களை அதிகரிக்கச் செய்ய வழிவகுப்பதால், இதன்மீது மறுசீராய்வு மனுவினை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

’’எஸ்.சி., எஸ்.டி., என்ற தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சகோதரர், சகோதரிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? 

 

காலங்காலமாக மேல்ஜாதி ஆணவம், திமிர் கொண்டு ‘ஜாதி பஞ்சாயத்து’ என்ற பேரிலும் நடத்தப்பட்ட, தனிப்பட்ட பார்ப்பனீய மேலாதிக்க நோயினால் பீடிக்கப்பட்ட இதர ஜாதியார்களின் வல்லாண்மைக்கு எதிராகவே - அது கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது.

 

பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை: இதில் பெரும்பாலான வழக்குகளில் விடுதலை பெற்றுவிடும் நிலை இருப்பதால், இக்குற்றம் சாட்டப் பெற்ற வன்கொடுமையாளர்கள் பெரிதும் விடுதலை பெற்று விடுவதால், அச்சட்டப்படி உடனடியாக கைது செய்தல் கூடாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு தவறான ஒரு தீர்ப்பாகும்! விசித்திர தீர்ப்பும்கூட!!

 

இத்தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரான தீர்ப்பு என்பதோடு, தீண்டாமைக் கொடுமைக்கும், வன்கொடுமை புரியும் வல்லாண்மையாளர்களுக்கும் சட்டப் பாதுகாப்பு வழங்கி, அச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தினையே தோற்கடிப்பதும் ஆகும்!

 

குற்றங்கள் அதிகம் - வெளிவருவதோ வெகு குறைவு! தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான ஆண், பெண் - இரு பாலர்களுக்கு நாள்தோறும் இழைக்கப்படும் வன்கொடுமைகள் வெளியே வருவது - நடப்பவைகளைவிட செய்தியாக வெளிவருவது வெகுக் குறைவே! ‘கற்பழிப்பு வழக்குகளில்’ பாதிக்கப்பட்டோர் வெளியே சொல்லாமல் ‘‘கமுக்கமாக’’ வைத்துக்கொள்ளும் வழமைபோல!

 

‘தலித் மக்களின் பாதுகாப்பு மய்யம்‘ என்ற ஓர் அமைப்பு செய்த ஆய்வு - இத்தீர்ப்பு எவ்வளவு ஒருதலைப்பட்சமான, ஒடுக்கப்பட்ட மக்களை பாதிக்கப்பட வைக்கும் தீர்ப்பு என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்குவதாக உள்ளது.

 

Centre for Dalit Rights (CDR)-என்ற அந்த அமைப்பின் புள்ளி விவரம் இதோ!

குற்றங்கள் அதிகரித்து வருகின்றன: தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் - அண்மைக் காலத்தில் 5.5 சதவிகிதமாகி இருக்கிறது. 2016 இல் 4.7 சதவிகிதமாக இருந்தது இவ்வாறு அதிகரித்துள்ளது!

 

மொத்தம் 1.44 லட்சம் வழக்குகளில் 23,408 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு வந்துள்ளன - நீதிமன்றங்களில்! இதில் விசாரணை முடிந்துள்ளவை 14,615 வழக்குகள்தான். தாழ்த்தப்பட்ட மக்கள் (எஸ்.சி.,), மலைவாழ் மக்கள் (எஸ்.டி.) ஆகியவர்கள்மீது ஏற்பட்ட வன்கொடுமைகள் பற்றிய வழக்குகளில் 2016 இல் 2,865 வழக்குகள்தான் முடிக்கப்பட்டுள்ளன!

 

நிலுவையில் உள்ள வழக்குகளோ 90% - 2016 ஆம் ஆண்டு இறுதியில் எஸ்.சி., மக்களுக்கு எதிரான குற்றங்கள்மீது நடத்தப்பட்ட வழக்குகளில் 89.6% (சுமார் 90 விழுக்காடு) இன்றும் விசாரணை முடிக்கப்பட முடியாத கட்டத்திலேயே இருக்கின்றன!

 

எஸ்.டி., என்ற மலைவாழ் மக்கள்மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலான வழக்குகளில் 87.1% விசாரணையின்றி நிலுவையில் உள்ளன!  மேலும் கடுமையாக்க ப்படவேண்டும் - இதன்மூலம் இச்சட்டம் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டுமே, தவிர, இலகுவாக ஆக்கப்படக் கூடாது.

 

காவல்துறையில் நிலவும் ஜாதி உணர்வும், ஜாதிய அணுகுமுறையும், மனப்பான்மையும் புறந்தள்ளத்தக்கதல்ல. படித்து, பதவிகளை ஓரளவு பெறுகிறார்கள் இந்த ஒடுக்கப்பட்டோர் என்பதை சகித்துக் கொள்ளாத நிலை பெரிதும் கிராமப்புறங்களில், ஆதிக்க ஜாதியினரிடம் (அது உள்ளார்ந்த பார்ப்பனீய மனப்பான்மையே) உள்ளது. அதன் விளைவால் அம்மக்களைக் கொடுமையாக நடத்தும் நிலை நிலவுகிறது.

 

அண்மையில் குஜராத் ‘உன்னா’ பகுதியில் நடந்த நிகழ்வின் கொடுமை எளிதில் புறந்தள்ளக் கூடியதா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மீது மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவேண்டும்.   மகளிரிடம் தவறான நோக்குடனும், காம இச்சையுடனும் நடக்கும் மேல் அதிகாரிகள், சக ஊழியர்கள் விஷயத்தில் (ஏன் காவல்துறையும் கூட - இதற்கு விதிவிலக்கல்ல) Offences against Sexual Harrasment Act என்பது, அதிலும் இதே மாதிரி எல்லாவற்றையும் ‘‘பொய்ப் புகார்கள் - மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள்’’ என்று புறந்தள்ளி விட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பினை எங்கே தேடுவது?

 

கடும் சட்டமிருந்தே அடங்க மறுக்கும் ஆதிக்க மனப்பான்மையாளர்களுக்கு அண்மையில் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு - மேலும் அக்குற்றங்களில் துணிந்து ஈடுபட ‘‘லைசென்சு’’ கொடுத்ததுபோல் ஆக்கிவிடும். எனவே, இது மறுசீராய்வுக்கு (Review)உரியதாகையால், மத்திய அரசு உடனே முன்வரவேண்டும். திராவிடர் கழகம் இதனை மிகவும் வற்புறுத்துகிறது.’’

சார்ந்த செய்திகள்