Skip to main content

கடலுக்கு செல்லும் காவிரி நீர்.. நீர்நிலைகளை தூர்வாரித்தர கோரிக்கை! 

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரி அதற்கான வரத்து வாய்க்கால்களை சீரமைத்திருந்தாலே தண்ணீர் பற்றாக்குறைக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஏரி, குளம், வரத்து வாய்க்கால் என்று அரசாங்க கணக்கில் இருக்கிறது. ஆனால் இடத்தில் இல்லை. அத்தனையும் ஆக்கிரமிப்புகள், மற்றொரு பக்கம் செடிகொடிகளின் ஆக்கிரமிப்பு. இதனால் பருவமழை மட்டுமல்ல எங்கோ பெய்யும் மழைத் தண்ணீர் காவிரியில் கரைபுரண்டு ஓடிவந்தாலும் தமிழகத்தில் அந்த தண்ணீரை தேக்கிவைத்து பயன்படுத்த வழியில்லாமல் தவிக்கிறார்கள் விவசாயிகள். ஆனால் தண்ணீரை நீர்நிலைகளில் சேமிக்க வேண்டும். சேமித்த நீரை பயன்படுத்த வேண்டும் என்று கோடிகோடியாக செலவு செய்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அந்த பணத்தில் பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தாலே தண்ணீரை சேமித்துவிடலாம். இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் மராமத்து இல்லாத நீர்நிலைகளால் மழைத் தண்ணீரும், காவிரித் தண்ணீரும் வீணாகி கடலுக்கு செல்கிறது.

 

Cauvery water to go to sea .. Request to clear water bodies!


இந்தநிலையில்தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சிக்குட்பட்ட ராஜாளிக்குளம் செல்லும் கிளை வாய்க்கால், கடந்த 15 வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் நான்கு முக்கியக் குளங்களில் தண்ணீர் நிரப்ப முடியாமல் வறண்டு கிடக்கின்றன.

கல்லணைக் கால்வாய் கடைமடைப் பகுதியைச் சேர்ந்த ராஜாளிக்குளம், கருந்தல்குண்டு, மிதியக்குடி மற்றும் அய்யனார் கோயில் குளம் ஆகியவற்றில் தண்ணீர் இல்லாததால், இதன் மூலம் பாசனவசதி பெறும் சுமார் 400 ஏக்கர் நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன.
 

Cauvery water to go to sea .. Request to clear water bodies!

 

இக்குளங்களுக்கு கல்லணை தண்ணீர் வந்து நிரப்புவது வழக்கம். ஆனால் தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் வரும் மடைகள்,  ஷட்டர்கள் அடைபட்டுக் கிடப்பதால், இக்குளங்கள் வறண்டு போய் காணப்படுகிறது. குளங்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களில் மரம், செடிகொடிகள்,  புதர்கள் மண்டிக் கிடப்பதாலும், கஜா புயலால் விழுந்த மரங்கள் சாய்ந்து கிடப்பதாலும், வரத்துவாரிகள் அடைபட்டுள்ளது.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணாநிதி கூறுகையில், "தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், நீர்நிலைகளை தூர்வாருவதில் அலட்சியப் போக்கான நிலையே காணப்படுகிறது. ஒட்டங்காடு பகுதியில் பல ஆண்டுகளாகவே நீர்நிலைகள் தூர்வாரப்படாமலேயே உள்ளன.

 

Cauvery water to go to sea .. Request to clear water bodies!


இதுகுறித்து, ஊராட்சிமன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு, தண்ணீர் வீணாகி கடலில் சேரும் நிலையில், இப்பகுதி நீர்நிலைகள் வறண்டுபோய் மண்மேடிட்டு காணப்படுவது வேதனையளிக்கிறது.
 

எங்கள் பகுதி நீர்நிலைகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, வரத்து வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரி குளங்களுக்கு தண்ணீர் நிரப்பித் தர ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.