Skip to main content

நிலம் கையகப்படுத்தப்பட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்படாத வழக்குகளில் விரைவில் தீர்வு காணப்படும்! - தலைமைச் செயலாளர் உறுதி!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

Cases of land acquisition and non-payment of compensation will be settled soon! - Chief Secretary confirmed!

 

அரசின் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீட்டு தொகை வழங்கப்படாமல் உள்ள வழக்குகளில் தீர்வு காண, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

 

அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டும், உரிய இழப்பீடு இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கமளிக்க ஏதுவாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

 

இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காணொளிக் காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

 

அப்போது நீதிபதி,  தமிழகம் முழுவதும், நிலம் கையகப்படுத்தப்பட்டும் உரிய இழப்பீடு வழங்காமல், 1053 கோடி ரூபாய் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 138 பக்க அறிக்கையை  வழங்கினார்.

 

மேலும் நீதிபதி ‘10 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய்க்கான இழப்பீடு கூட தரப்படாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. இதன் காரணமாக, நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. 50 லட்ச ரூபாய்க்கு குறைவான தொகை தொடர்புடைய வழக்குகளைக் கைவிடுவதென வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது போல, அரசும் இதில் ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.  தற்போதையை  பட்ஜெட் கூட்டத் தொடரில் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

சில நேரங்களில், அரசின் அவசரத் தேவைக்காக, தனியார் நிலங்கள் கையகப்படுத்தாமலேயே பயன்படுத்தப்படுகிறது. அதை நிறுத்த வேண்டும். கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீட்டைச் செலுத்த கால தாமதம் செய்வதால், நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி ஒவ்வொரு நாளுக்கும் அரசு அதிகப்படியான வட்டி செலுத்த வேண்டிவரும். அதிலும், கடைசியில் மக்களின் வரிப்பணம்தான் வீணாகும்.’ எனத் தெரிவித்தார். 


  
இதற்கு விளக்கமளித்த தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ‘வீட்டுவசதித் துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைளை எதிர்த்து, கடந்த 1997ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 1,231 வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறையின் முதன்மைச் செயலாளர்களிடம் ஆலோசித்துள்ளோம். அத்தகைய வழக்குகளில், இழப்பீட்டு தொகையை விரைந்து செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.’ என உறுதியளித்தார்.

 

தலைமைச் செயலாளரின் உத்தரவாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 4ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

 

சார்ந்த செய்திகள்