Skip to main content

"ஜெயக்குமாரை கைது செய்திருப்பது நகைப்புக்குரியது" - அண்ணாமலை கண்டனம்!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

BJP state leader Annamalai condemns Jayakumar's arrest

 

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் வாக்களிக்கச் சென்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் தாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

அதன் தொடர்ச்சியாக, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு நேரில் அழைத்து சென்று ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

அந்த வகையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தி.மு.க. அரசு தன்னுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்! கள்ள ஓட்டு போட்டவர்களை விட்டுவிட்டு, அதைத் தடுக்க முயற்சித்தவரை கைது செய்திருப்பது நகைப்புக்குரியது!" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்