Skip to main content

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை: அரசுத்துறை அதிகாரியை கண்டித்து பா.ஜ.கவினர் போராட்டம்!

Published on 26/04/2018 | Edited on 26/04/2018
bjp


புதுச்சேரியில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை விசாரிக்கும் ஆணையத்தை அமைக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். அதற்கான ஆணையத்தை கலெக்டர் அமைத்தார். இதற்கு தலைவராக வித்தியா ராம்குமார் நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அரசுத்துறை இயக்குனர்கள் சிலர் மீது புகார் வந்தது. இதுகுறித்து வித்தியா ராம்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே பல்வேறு புகார்கள் கவர்னருக்கும் வந்தது. இந்த புகாரையும் கவர்னர் அந்த ஆணையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதில் கால்நடைத்துறை இயக்குனர் பத்மநாபன் மீது பலர் புகார் கொடுத்தனர். மொத்தம் 27 பெண்கள் பாலியல் புகார் கொடுத்தனர். இதன் மீது விசாரணை நடத்திய போது அந்த இயக்குனர் தன்னுடன் பணிபுரியும் பெண்களை ஆசைக்கு இணங்க வலியுறுத்தியதும், இணங்கவில்லை என்றால் வேறு இடத்திற்கு மாற்றிவிடுவேன் என்று மிரட்டியுள்ளதும் தெரியவந்தது.
 

bjp


இந்நிலையில் பா.ஜ.க மகளிர் அணியினர் ஏராளமானோர் கால்நடைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கைகளில் கண்டன பதாகைகளும், துடைப்பங்களும் ஏந்தி வந்த அவர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் அதிகாரிகளையும், புதுச்சேரி அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது அலுவலகத்தினுள் நுழைய முற்பட்ட பெண்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடரும் பாலியல் புகார்களால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்