Skip to main content

டீ வியாபாரியோடு சாலையில் அடித்து புறண்ட போலிஸ் ஏட்டு!!!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020
tea



போலீஸ்காரர் ஒருவரும் சாலையில் டீ விற்கும் தொழிலாளி ஒருவரும் அடித்துப்புரண்டு கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.


தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் தீபக். ஊரடங்கு உத்தரவால், காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் ரோந்து பணிக்கு செல்வது அவரது வேலை. அந்த வகையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் வழியில் சைக்கிளில் கேனில் டீ வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார் நந்தவர்மன். 

அவரது சைக்கிளை நிறுத்த சொல்லிய தீபக், இங்கு டீ விற்க கூடாது. மீறி விற்றால் உன்னையும், உன் சைக்கிளையும், டீ கேனையும் உள்ளே தள்ளி வழக்குப் போட்டு விடுவேன் என்று மிரட்ட, பதிலுக்கு நந்தவர்மனோ அரசாங்கம் 144 தடை உத்தரவு கூட்டமா கூடக்கூடாது, இடைவேளை விட்டு இருக்க வேண்டும் என்றுதான் கூறி இருக்கிறது. சைக்கிளில் டீ விற்க கூடாது எனக் கூறவில்லை, இருந்த வருமானமும் போச்சு, டீ வித்து பிள்ளைங்களுக்கு கஞ்சி ஊத்துறேன் என கூற, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி இருவரும் சாலையில் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து, தாக்கிக் கொண்டனர். அப்போது கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்த தீபக் நந்தவர்மனை தாக்க வலி தாங்க முடியாமல், அந்த கட்டையை பிடுங்கி ஏட்டு தீபக்கை சாத்தி எடுத்தார். இதை வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் வீதிகளில் திரண்டு நின்று வேடிக்கைப் பார்த்தனர்.

இந்த தகவல் அறிந்த திருப்பனந்தாள் போலீசார் அங்கு விரைந்து சென்று போலீஸ்காரரையும், டீ வியாபாரியையும் சமாதானம் செய்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பினர்.

சாலையில் போலீஸ்காரர் ஒருவர் சாதாரண டீ வியாபாரியிடம் சண்டையிட்ட வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவத் துவங்கியிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்