Skip to main content

BHEL நிர்வாகத்திற்கு தலைவலி கொடுக்கும் 700 தொழிலாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம் ! 

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

 

bh

 

திருச்சியில் மிகமுக்கியமான தொழிற்சாலை BHEL.  இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். மிகவும் லாபகரமான தொழிற்சாலையாக இருந்து வருகிறது. அதில், தற்போது ஒரே நேரத்தில் 700 தொழிலாளர்கள் விடுப்பு போராட்டம் ஆரம்பித்திருப்பது தொழிற்சாலைக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 

 

BHEL தொழிற்சாலையில் மிக முக்கியமான பிரிவு வெல்டர் பிரிவு. இதில் 900க்கும் அதிமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். வழக்கமாக உள்ள மற்ற பிரிவில் உள்ளவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு கொடுக்கப்படும். ஆனால் வெல்டிங்கில் உள்ளவர்களுக்கு மட்டும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு கொடுப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. 

 

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பதவி உயர்வு என்பதே இல்லை என்கிற நிலையை பெல் நிர்வாகம் கொண்டு வந்தது. உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை தொழிலாளர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாக இருந்து வந்தது. 

 

நிர்வாகத்தை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதுவும் இழுபறியில் போக வழக்கை வாபஸ் பெற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு இடையில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டாம் என கைவிட்டனர். 

 

இதன் பின்னர் மாஸ் விடுப்பு எடுப்பது என முடிவெடுத்து நேற்றிலிருந்து 6ந்தேதி வரை 700 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்து போராட்டத்தை துவங்கினர். ஒரே நேரத்தில் 700 வெல்டிங் தொழிலாளர்கள் விடுப்பு போராட்டம் எடுத்தது பெல் நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

700 தொழிலாளர்களுக்கு இந்த விடுப்பு சம்பளம் கிடைக்காதாம். வெல்டர்கள் வேலைக்கு செல்லாததால் பெல் தொழிற்சாலை வேலை எதுவும் நடக்காமல் இருக்கிறதாம். இந்த ஆண்டு கணக்கு தற்போது வரை 30 சதவீத பணியே நிறைவடைந்து உள்ளதாம். இந்த ஆண்டு கணக்கு முடிய இன்னும் 5 மாதங்களே இருப்பதால் பணிகள் எல்லாம் அப்படியே பாதியில் நிற்கிறது. பெல் தொழிற்சாலையில் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் வெல்டர்களின் இந்த போராட்டத்தால் அதிகாரிகள் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் மிகுந்த யோசனையில் இருக்கிறார்கள். 

 

சம்பளம் போனாலும் பரவாயில்லை ஒரு தீர்வு கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள் வெல்டிங் தொழிலாளர்கள். 

 

சார்ந்த செய்திகள்