Skip to main content

ஏமாற்றிய எம்.எல்.ஏ பேரனை சிறைக்கு அனுப்பிய பி.எச்.டி மாணவி!!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

இன்றைய தலைமுறையினர் காதல் என்ற பெயருக்கே அர்த்தம் தெரியாமல் வெறும் உடல் சுகத்திற்காக மட்டுமே காதல் என்கிற போர்வையில் ஜாலியாக இருந்து கசந்த பின்பு அடுத்தவரிடம் தாவும் மனப்பான்மையுடன் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் விதி விலக்காக தன்னை ஏமாற்றியவனை எப்படியும் பலி வாங்கி விடவேண்டும் என்கிற மனபோக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சி பி.எச்.டி படித்த மாணவியை சட்டம் படிக்கும் மாணவன் இரண்டு வருடம் காதலித்து விட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்தவனை சிறையில் அனுப்பிய சம்பவம் திருச்சியில் நடைபெற்று உள்ளது.

 

cheat


 

 

 

திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவை சேர்ந்த தங்கராஜ்-பழனியம்மாள் ஆகியோரின் மகள் ரம்யா(26). பி.எச்டி பட்டம் பெற்றுள்ளார். திருவெறும்பூரை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும் தற்போது அதிமுகவில் இருந்து வரும் துரை என்பவரின் மகன் முத்துவின் மகன் ராம்பிரசாத் (26). திருச்சி அரசு சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். 

ராம்பிரசாத்தும் ரம்யாவும் தூரத்து உறவுமுறையாகும். இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். ராம்பிரசாத் ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகினர். 

இதற்கிடையே ராம்பிரசாத் தான் படிக்கும் அதே சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை காதலித்ததால் ரம்யாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால் ரம்யா சட்ட கல்லூரிக்கு சென்று ராம் பிரசாத்தையும் சம்மந்தப்பட்ட மாணவியையும் கண்டித்துள்ளார். ஆனாலும் ராம்பிரசாத் ரம்யாவை திருமணம் செய்ய மறுத்து விட்டார். 

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன் ராம்பிரசாத்தை ரம்யா நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் போலீசில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார். அதன்படி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அமுதாராணி வழக்குப்பதிவு செய்து ராம்பிரசாத்தை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். 

ஆனால் ராம்பிரசாத் தினமும் சட்ட கல்லூரிக்கு வந்து செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூர் எஸ்ஐ சத்யாதேவி சட்ட கல்லூரிக்கு சென்று வாசலில் ராம்பிரசாத் சட்டக்கல்லூரியில் இருந்து வெளியே வரும்வரை காத்திருந்து நண்பர்களுடன் வெளியே வந்த ராம்பிரசாத்தை கைது செய்தனர். 


பின்னர் திருவெறும்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து ராம்பிரசாத்திடம் மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் ரம்யாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து ராம்பிரசாத்தை திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ரம்யாவை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முன்னாள் எம்எல்ஏவின் பேரன் முனைவர் பட்டம் பெற்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்