தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டமன்றம் கூடி மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் உரையாற்றினார்.
அப்போது அவர், “குற்றச் செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிலரின் பற்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தவுடன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. அந்த ஏ.எஸ்.பி. உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்களில் எந்த விதமான சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில் இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட, அம்பாசமுத்திர கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரை பணி இடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்த பிறகு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நான் உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.