அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் தஞ்சாவூர் மாவட்டம், திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்தார். இவர், அப்பள்ளியின் விடுதியில் தங்கியபடி 12- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன்பு பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும், மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் விஷம் குடித்ததாகவும் மாணவி கூறியதாக வெளியான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதுடன், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முழுமையாக மறுப்பு தெரிவித்த பள்ளி நிர்வாகம் விரிவான அறிக்கையை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து குடும்பச் சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும், மாணவி கூறும் மற்றொரு வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அம்மாணவியின் தந்தை சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையை நாடினார். அவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மாணவி மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும் என உத்தரவிட்டிருக்கிறார்.
இவ்வழக்கில் மாணவி பேசியதாக வெளியான வீடியோக்கள் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் ஆக்கப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவர், வீடியோவை வெளியிட, அதை பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கையில் எடுத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அது திட்டமிட்டு எடிட் செய்து வெளியிடப்பட்ட வீடியோ என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், அவற்றைச் சுற்றி எழுந்த அரசியல் இவ்விவகாரத்தை சிக்கல் ஆக்கியது. இந்நிலையில் இந்த வீடியோ விவகாரம் இவ்வளவு பெரிய சிக்கலாக மாறக் காரணமாக இருந்தது காவல்துறை அஜாக்கிரதைதான் என்பதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், காவல்துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்துத் தன் அதிருப்தியைத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.