Skip to main content

“உங்களுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டு இருக்கு..” ஃபோனில் மிரட்டிய போலி மாந்திரீக இளைஞர்கள்! 

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

Ariyalur police arrested three in cheating case

 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் மாந்திரீக ஆசாமிகள் சிலர் போன் மூலம் பேசி உள்ளனர். அவர்கள் தங்கள் பாணியில் ‘உங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்தால் தான் உங்கள் குடும்பம் மேலோங்கும்; இல்லாவிட்டால் கெட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். உங்கள் குடும்பத்தில் நிம்மதி இருக்காது’ என விஜயகுமாரிடம் ஒருவித மிரட்டலாக பயமுறுத்தி பேசி அதற்குப் பரிகாரமாக மாந்திரீகம் செய்து கெட்ட ஆவிகளை போக்கி பில்லி சூனியத்தை நீக்கி விடுவதாக கூறி உள்ளனர். 


இதற்காக அவ்வப்போது விஜயகுமாரிடம் இருந்து 12 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்கள் போலி மந்திரவாதிகள் என்பதை அறிந்த விஜயகுமார் அரியலூர் மாவட்ட சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்தத் தகவல் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் உத்தரவின் பேரில் விஜயகுமார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து அந்த மாய ஆசாமிகளை தேடி வந்தனர். 

 

இந்தநிலையில், சேலம் மாவட்டம் எருமைப்பட்டி பகுதியில் இதே போன்ற ஒரு கும்பல் அப்பகுதி மக்களை மிரட்டி பில்லி சூனியம் வைப்பதாக கூறி பணம் பிடுங்கிவருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(27), இவரது நண்பர்கள் கிருஷ்ணன், தர்மராஜ், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குமார்(39) என்பது தெரியவந்து. இவர்கள் நால்வரில் மூவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர் ஒருவரை தேடி வருகின்றனர். 

 

பிடிப்பட்ட மூவரிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் நால்வரும் சேர்ந்து செல்போன் எண்கள் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த அப்பாவி மனிதர்களை பில்லி சூனியம் இருப்பதாக கூறி மிரட்டி அவர்களிடமிருந்து பல லட்சம் பணம் பறித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. 


போலி மந்திரவாதிகளை அரியலூர் அழைத்துவந்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்கள், 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்