Skip to main content

தூய்மைப் பணியாளர்களுக்கு கும்ப மரியாதை, பரிவட்டம், பணமாலை, கற்பூர தீப ஆராதனை!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020
t

 

தூய்மைப் பணியாளர்களின் விலைமதிப்பற்ற சேவையைப் போற்றும் வகையில்  தூய்மைப் பணியாளர்களுக்கு மஞ்சள் நீரில் நனைத்த துண்டால் பரிவட்டம் கட்டி கும்ப மரியாதைச் செலுத்தி தூய்மைப் பணியாளர்களின் சேவை புனிதமானது என்பதை உணர்த்தும் விதமாகப் பணத்தை மாலையாக அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது அரியலூரில்.

 

கரோனா உள்ளிட்ட எந்தவிதமான பேரிடராக இருந்தாலும் தெருக்களிலும் சாக்கடைகளிலும் தேங்கும் கழிவுகளை அகற்றுவதிலும் முதன்மையான மேலான தூய்மைக்கு முதலிடம் கொடுத்து அர்ப்பணிப்போடு பணிபுரிவதில் தூய்மைப் பணியாளர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.எனவே ஆங்காங்கே தூய்மைப் பணியாளர்களைப் போற்றுவதில் சமூக ஆர்வலர்கள் பலரும் நூதன முறையில் ஊக்குவிக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர்.

 

அவ்வகையில் அரியலூர் மாவட்டம் கீழக்கா வட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோவில் கும்பாபிஷேகத்தின் போது வழங்கப்படும் உயரிய மரியாதையாகக் கருதப்படும் கும்ப மரியாதை,பரிவட்டம்,விலை மதிப்பற்ற தூய்மைப் பணியைத் தன்னலம் கருதாது குறைந்த ஊதியத்தில் நிறைவான பணியைச் செய்து வருபவர்களை ஊக்குவிக்கவும் மரியாதை செய்யவும் கிராம ஆர்வலர்களால் முடிவு செய்யப்பட்டது.அதன்படி  அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் அவர்களுக்கு கும்ப மரியாதை செலுத்தி பாரம்பரிய முறைப்படி இயற்கை கிருமி நாசினியும் வெயில் காலத்தில் வெயிலைத் தாங்கும் சக்தியும் கொண்ட மஞ்சள் நீரில் நனைத்த துண்டைப் பரிவட்டம் கட்டி, 09.04.2020 அன்று பணத்தை மாலையாக அணிவித்தும் கற்பூர தீபம் ஏற்றி ஆரத்தி எடுத்தும் கீழக்காவட்டாங்குறிச்சி கிராம பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்கள் 11 பேருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சிக்கு கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்   பால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தார்.முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வினோத்ராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.மேலும் ஊராட்சி செயலாளர் பிரபாகர் நன்றியுரை ஆற்றினார்.


 

சார்ந்த செய்திகள்