Skip to main content

விசிக ரயில் மறியல் போராட்டம்; காவல்துறையினருடன் தள்ளு முள்ளு 

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Argument with police in vck train rally

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சிலர் அத்துமீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து நாடாளுமன்ற வளாகத்தில் கலர் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி தொடர் அமலில் ஈடுபட்டு வந்த 140 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் திமுக, திரிணாமுல்  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் 40க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்  விரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 Argument with police in vck train rally

அப்போது காவல்துறையினர்,  ரயில்வே காவல்துறையினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டதால் ரயில் நிலையத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 40 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதன்பின் ரயில் போக்குவரத்து அப்பாதையில் சீரானது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.