Skip to main content

மதிய உணவில் அரணை; ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Aranai at lunch; 3 employees suspended

சிதம்பரம் அருகே சாத்தங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாத்தங்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் நேற்று 12 ஆம் தேதி மதிய உணவு பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை அழைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து மாணவர்கள் அதிகமானோர் மயங்கியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உணவில் அரணை விழுந்தது தெரியவந்தது. சிதம்பரம் அரசு மருத்துவமனை, புவனகிரி  மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் 92 மாணவ - மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ - மாணவிகளுக்கு ஆபத்து இல்லை என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமையில் சாத்தங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த உணவுக் கூடத்தை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சமையலர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி உணவுக் கூடங்களைத் திடீரென ஆய்வு மேற்கொண்டு குறைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Aranai at lunch; 3 employees suspended

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில், அலட்சியமாகப் பணியாற்றிய ஊழியர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சத்துணவு அமைப்பாளர் செல்வி, ஊழியர்கள் சாந்தி, கௌதமி ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்