Skip to main content

"அனைத்து அன்னதானக் கோயில்களிலும் அன்னதானம்"- அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு!

Published on 19/09/2021 | Edited on 19/09/2021

 

"Annathanam in all Annathanak temples" - Announcement by Minister BK Sekarbabu!

திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் கோயில்களில் பக்தர்களுக்கு இலையில் அன்னதானம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 754 திருக்கோயில்களில், தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. 

 

கடந்த 16/09/2021 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தினை துவக்கி வைத்தார். இத்திட்டம் பக்தர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. 

 

கரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் இலையில் பரிமாறப்படாமல் உணவுப் பொட்டலங்களாக அனைத்து நாட்களிலும் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட) பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறையினை மாற்றிப் பின்வரும் முறையில் அன்னதானம் திருக்கோயில்களில் நாளை (20/09/2021) முதல் வழங்கப்படும். 

 

திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் திருக்கோயில்களிலும் அன்னதானக் கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் இலையில் பரிமாறப்படும். 

 

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அன்னதானம் உணவுப் பொட்டலங்களாகப் பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்." இவ்வாறு அமைச்சர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்