Skip to main content

அண்ணாமலைப்பல்கலைக்கழக ஊழியர் சங்க தேர்தல் ரத்து - வட்டாட்சியர் உத்தரவு

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
s

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக ஊழியர் சங்க தேர்தலை ரத்து செய்வதோடு நீதி மன்றத்தை அனுகி அதற்கான முடிவை பெற வேண்டும் என்று சிதம்பரம் வட்டாட்சியர் அமுதா உத்திரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர்கள் தேர்தல் மூலம் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்து எடுப்பார்கள். இவர்கள் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பாலமாக செயல்பட்டு ஊழியர்களின் பிரச்சணைகளை தீர்த்து வைப்பார்கள். இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தேர்தல் மூலம் மனோகரன் சங்கத்தின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவரது பதவிகாலம் இம்மாதம் முடிவடையும் நிலையில் சங்கத்தின் பொதுக்குழுவில் வரும் 27-ந்தேதி சங்கத்தின் தேர்தல் நடைபெறும் என்று தலைவர் மனோகரன் அறிவித்துள்ளார்.

 

இந்த தேர்தலுக்கு ஊழியர்கள் பல்வேறு வித எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  தமிழக அரசு பணியிடங்களுக்கு பணிமாறுதலுக்கு தமிழக முழுவதும் சென்றுள்ளனர். அவர்களுக்கு ஓட்டுரிமை மட்டும் தான் உள்ளது. தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை போட்டியிட அனுமதிக்கவேண்டும். மேலும் தேர்தலை விடுமுறை நாள் அல்லது திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் தான் தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்கள் சிரமம் இன்றி வாக்களிப்பார்கள். அல்லது ஊழியர்கள் பணி செய்யும் மாவட்டத்தின் ஒரு இடத்தில் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும். தேர்தலுக்கு குறுகிய காலம் உள்ளதால் தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று முன்னாள் ஊழியர் சங்க தலைவர் மதியழகன் தலைமையில் ஒரு அணியும், பணிமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஒரு அணியாகவும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நடேசனிடம் மனுகொடுத்து வலியுறுத்தினார்கள். இதற்கு தேர்தல் அதிகாரி தற்போதைய ஊழியர் சங்கத்தினர் கொடுத்த தீர்மானத்தின் படிதான் செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார்.

 

இதனைதொடர்ந்து பணிநிரவல் ஊழியர்கள், ஊழியர் சங்கத்தினர் சிதம்பரம் வட்டாட்சியரிடம் பல்கலைக்கழகத்தில் ஊழியர் சங்க தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். ஊழியர்களின் பிரச்சணைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும், அறிவிக்கப்பட்ட தேர்தலால்  போட்டியிடும் 3 அணியினருக்கும் முரண்பாடான கருத்துக்கள் உள்ளது. என்று மனுகொடுத்துள்ளனர்.

 

இந்நிலையில் சிதம்பரம் வட்டாட்சியர் அமுதா திங்களன்று சம்பந்தபட்ட 3 அணிகளை சார்ந்த ஊழியர் சங்கத்தினர், காவல்துறையினர், வருவாய் துறையினரை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஊழியர்களுக்குள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. வட்டாட்சியர் பல முறை அமைதிபடுத்தியும் கூச்சல் அடங்கவில்லை.

 

இதனால் அண்ணாமலைப்பல்கலைக்கழக ஊழியர் சங்க தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெற்றால் பல்கலைக்கழக வளாகத்தில் அசாத்தியமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சணை ஏற்படகூடிய நிலை ஏற்படும். எனவே வரும் 27-ந்தேதி தேர்தல் நடத்துவோ அதற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடாது. மேலும் தேர்தல் நடத்துவது குறித்து நீதி மன்றத்தை அணுகி முடிவு செய்துகொள்ளவேண்டும் என்று வட்டாட்சியர் அமுதா  உத்திரவிட்டார். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நீதி மன்றம் சென்று தேர்தலை நடத்தவேண்டும் என்பதால் ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்