Skip to main content

கோவை கார் வெடி விபத்து குறித்து அண்ணாமலை கருத்து! 

Published on 23/10/2022 | Edited on 23/10/2022

 

Annamalai statement on coimbatore car accident

 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, இன்று அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். அதற்குள் காரில் இருந்த ஒருவர் முற்றிலுமாக தீயில் எரிந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளார். கார் பொள்ளாச்சி பதிவெண் கொண்டது என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இறந்தவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அதனால், காரின் பதிவெண் கொண்டு அந்த முகவரியை கண்டறிந்து அதன் பிறகு இறந்தவர் குறித்து விசாரணை நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. அதேசமயம், கோவை தெற்கு வட்டாட்சியர் சரண்யா வருவாய்த் துறை சார்பில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்திவருகிறார். தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்துவருகின்றனர். விபத்து நடந்த பகுதியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் வரை காவல்துறை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்தனர். மேலும், தடயவியல் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் தடயங்களை சேகரித்துவருகின்றனர். 

 

இந்நிலையில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

 

தமிழக காவல்துறை டி.ஜி.பி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளதை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது. தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்