Skip to main content

பேரறிஞர் அண்ணா நினைவு தினம்; திமுக சார்பில் அமைதிப் பேரணி!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Anna Memorial Day; Peace rally on behalf of DMK

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று (03.02.2024) தமிழக அரசு சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி மேற்கொண்டுள்ளனர். அதன்படி சேப்பாக்கம் அரசினர் விடுதியில் இருந்து பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரை அமைதிப்பேரணி மேற்கொண்டுள்ளனர்.

இந்த அமைதிப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு இடையே அமைந்துள்ள பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த  இடத்தில் பேரறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திடுமாறு, அரசியல் கட்சியினர், அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மெரினாவில் அருங்காட்சியகம்; மக்களின் பங்களிப்பை நாடும் தமிழ்நாடு அரசு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 The Tamil Nadu government will make a request to the people on Independence Day Museum at Marina

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் எதிரே பிரம்மாண்ட சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் 75ஆவது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.