Skip to main content

கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரத்தில் ஒருவர் பலி; அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Anbumani Condemns for One lost life in Villupuram after drinking illicit liquor

கள்ளக்குறிச்சி நச்சு சாராய சோகம் விலகும் முன்பே விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து முதியவர் சாவு: கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலம் என்ற இடத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த ஜெயராமன் என்ற முதியவர் உயிரிழந்துள்ளார்.  மேலும் இருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.  உயிரிழந்த ஜெயராமனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் இருவரும்  விரைவாக நலம் பெற விழைகிறேன்.

கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 19-ஆம் தேதி தான் மெத்தனால் கலக்கப்பட்ட நச்சு சாராயம் குடித்து  65 பேர் உயிரிழந்தனர். அந்த பெரும் சோகம் நிகழ்ந்து 10 நாட்களிலேயே , ஜூன் 29-ஆம் நாள் டி.குமாரமங்கலத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து ஒருவர்  உயிரிழந்திருப்பது வேதனையை அதிகரிக்கச் செய்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய வணிகத்தைக் கட்டுப்படுத்த  தீவிர சோதனைகள் நடத்தப்பட்டதாக தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சிக்கு மிக அருகிலேயே எத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே கள்ளச்சாராய விற்பனை தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் கள்ளச்சராயம் குடித்து எவ்வளவு பேர் உயிரிழந்தாலும், கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த மாட்டோம் என்ற மனநிலையில் தமிழக அரசும், காவல்துறையும் இருப்பதையே டி.குமாரமங்கலம் கள்ளச்சாராய சாவு காட்டுகிறது. கள்ளச்சாராய  வணிகத்துக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு இருப்பதற்கு டி.குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது  தான் சான்று ஆகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால், இதை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த முருகன் என்பவர்  புதுவையிலிருந்து  வாங்கி வந்த மதுவைக் குடித்ததால் தான் முதியவர் ஜெயராமன்  உயிரிழந்ததாக காவல்துறை பொய்யான தகவல்களை கூறியுள்ளனர். இதை உயிரிழந்த ஜெயராமனின் மருமகன் மறுத்திருப்பதுடன், தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம் தாராளமாக  விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.  இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை; கள்ளச்சாராய வணிகர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டு காவல்துறை விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்பதால் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய  சாவுகள் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.  எனவே, கள்ளச்சாராய சாவுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Scythe cut to a pmk figure in Cuddalore

திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கின்ற சிவசங்கர். கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நிலையில் கடலூர் நகர முன்னாள் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் சனிக்கிழமை(6.7.2024) மாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மரர்ம நபர்கள்  இவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சல் இடவே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்பொழுது சங்கருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயம் உள்ள நிலையில் அவருக்கு தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டிப்பாளையம் பகுதியில் ஒரு கொலை சம்பவம் நடந்த நிலையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சங்கரின் ஆதரவாளர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால் கடலூரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையிலும் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் தம்பி பாமக பிரமுகர் பிரபுவை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சதீஸ், தங்கபாண்டியன், வெங்கடேசன் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர் பிரபுவின் அண்ணன் சங்கர். இதனால் இவர் இன்று வெட்டி படுகொலை செய்ய இருந்ததாக போலீசாரின் விசாரணையில் முதற்கட்ட தகவலாக உள்ளது.

Next Story

பாமக பிரமுகருக்கு சரமாரி வெட்டு; கடலூரில் பரபரப்பு 

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
 barrage of blows to a PMK executive Cuddalore

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். பாமக பிரமுகரான இவர், வன்னியர் சங்க முன்னாள் கடலூர் நகர தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று தனது சங்கர் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் சங்கர் சரிந்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சங்கரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் சங்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சங்கர் ஆதரவாளர்கள் மருத்துவமனை முன் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.