Skip to main content

கஜா புயல் நிவாரணத்திற்கு கோ-ஆப்டெக்சில் போர்வை கொள்முதல் செய்ய வேண்டும்! அன்புமணி

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
an

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை :கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான போர்வைகளைக் கொள்முதல் செய்வதில் அதிமுகவினர் பெருமளவில் முறைகேடுகளை செய்வதாக வெளியாகியுள்ள தகவல்கள் பேரதிர்ச்சி அளிக்கின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பது போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விஷயத்தில் கூட ஆளுங்கட்சியினர் ஊழல், முறைகேடு செய்வது கண்டிக்கத்தக்கது.

 

காவிரி பாசன மாவட்டங்கள் கஜா புயலால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள், வேட்டி, சேலைகள், துண்டுகள் உள்ளிட்ட 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அப்பெட்டகத்தில் இடம் பெறும் பொருட்களை கொள்முதல் செய்து வழங்கும் பொறுப்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தில் இடம் பெறும் பொருட்களில் ஒன்றான போர்வைகளை கொள்முதல் செய்வதில் தான் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக போர்வைகளை வழங்க வேண்டும் என்பதால், வழக்கமாக கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியாது. கொள்முதல் செய்யப்படும் போர்வைகளுக்கு  அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து, அந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வருவோரிடமிருந்து போர்வைகளை கொள்முதல் செய்வது மட்டும் தான் இப்போதைக்கு சாத்தியமாகும். இதைப் பயன்படுத்திக் கொண்ட அதிமுகவினர், மலிவு விலைக்கு போர்வைகளை கொள்முதல் செய்து அரசுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பெரிய ஆலைகளில் எந்திரங்களை துடைக்கப் பயன்படுத்தும் மட்ட ரக நூலில்  நெய்யப்பட்ட போர்வைகளை ஒரு பேல் 80 ரூபாய்க்கு வாங்கி நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம்  ரூ.120க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த ஊழலுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக உயரதிகாரிகளும், அமைச்சர்களும் ஆதரவாக உள்ளனர். இதனால் ரூ.100 கோடிக்கு போர்வைகள் வாங்கப்பட்டால் ரூ.33 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

 

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஊழல் செய்து பயனடைய வேண்டும் என்பதற்காக இத்தகைய கொள்முதல் முறையை அதிமுக அரசு கடைபிடிப்பதாக ஈரோடு மாவட்டம் கூட்டுறவு நெசவாளர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கோ&ஆப்டெக்சில் கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் கூடுதலான போர்வைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் சற்று விலை கூடுதலாக இருந்தாலும் கூட தரமானவை. கோ&ஆப்டெக்ஸ் நிறுவனம் நினைத்தால் ஒரு வாரத்திற்குள்  மேலும் பல லட்சம் போர்வைகளை தரம் குறையாமல் கொள்முதல் செய்து கொடுக்க முடியும். அவை அனைத்தும் கைத்தறியில் நெய்யப்படுபவை. சிறந்த தரம் கொண்டவை. வீடுகள் கூட இல்லாமல் குளிரில் தவிக்கும் மக்களுக்கு தரமான கோ ஆப்டெக்ஸ் போர்வைகளை வழங்காமல் எந்திரம் துடைக்கும் துணியில் நெய்யப்பட்ட மட்ட ரக போர்வைகளை வழங்கினால் அவை ஒரு வாரத்திற்கு கூட தாங்காது.

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள்  துடிக்கின்றனர். பிற மாநில மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை அனுப்பி வைக்கின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் மொய் விருந்து நடத்தி அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் திரட்டப்படுவதைப் பார்த்த பிச்சைக்காரர் ஒருவர் தமது தட்டில் இருந்த பணத்தை அப்படியே கொடையாக கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரும் இவ்வாறு துடிக்கும் நிலையில், அவர்களுக்கு போர்வை வாங்குவதில் ஆட்சியாளர்களின் துணையுடன் முறைகேடு செய்பவர்கள் எந்த வகையான மனிதர்களாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை.

 

ஊழல் செய்தே பழகிப்போனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விஷயத்திலாவது நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். தனியாரிடம் போர்வை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டு, கோ&ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் தரமான போர்வைகளை வாங்கி மக்களுக்கு வினியோகிக்க அரசு முன்வர வேண்டும்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.