Skip to main content

பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி போடும் நிபந்தனை! 

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
eps - modi




நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில், கூட்டணி அமைக்கும் முயற்சியில் மாநில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது பாஜக தலைமை. இதற்காக 17 மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை சமீபத்தில் நியமித்திருக்கிறார் அமீத்ஷா. 

 

இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்கிற திட்டத்துடன் காய்களை நகர்த்தி வரும் பாஜக தலைமை, ' தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும்; நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் பாஜகவுக்கு சீட் ஒதுக்கப்பட்டு கூட்டணி அமைக்கப்பட வேண்டும்' என்கிற அழுத்தத்தை எடப்பாடிக்கு கொடுத்து வந்தது. 

 

இந்த நிலையில்தான், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரிடமும் சில முக்கிய தகவல்களைச் சொல்லி டெல்லிக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. 



டெல்லி சென்ற அவர்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினர். அதிமுகவுடனான அரசியல் விவகாரங்களை நிர்மலா கவனிப்பதால்,  அரசியல் ரீதியிலான விவாதங்களை அவரிடம்தான் ஆலோசிக்கிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக! 

 

அந்த வகையில்தான், நிர்மலாவை சந்தித்து விவாதிக்க அமைச்சர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார் எடப்பாடி. மத்திய அமைச்சருடனான அந்த சந்திப்பில் , தங்களது நிலையை அழுத்தமாக வலியுறுத்தி விட்டு வந்துள்ளனர் அமைச்சர்கள். 


 

P. Thangamani S.P Velumani Nirmala Sitharaman


 

இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, "தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி தொடர்பான விவகாரங்களை பேசி முடித்துவிட்டு, கூட்டணி குறித்த விசயங்களை அமைச்சர்கள் பேசியிருக்கிறார்கள். அப்போது, தினகரனை கட்சியில் இணைக்கச் சொல்லி வலியுறுத்தாதீர்கள். 

 

இணைப்பிற்கு அதிமுகவின் அனைத்து நிர்வாகிகளிடமும் எதிர்ப்பு இருக்கிறது. தினகரனை இணைத்தால் இன்னொரு அதிகார தலைமை உருவாகுமே தவிர, நீங்கள் நினைக்கும் சூழல் வராது. அதனால், தினகரன் இல்லாமலே நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை எங்களால் தரமுடியும். அதனால், தினகரனை சேர்க்கச் சொல்லி வலியுறுத்த வேண்டாம். 

 

பாஜகவுடன்  கூட்டணி வைக்க எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால்,  அதிமுகவில் உள்ள 50 எம்.பி.க்களில் லோக்சபா எம்.பி.க்களாக உள்ள 37 பேரில் பலரும் பாஜக கூட்டணியை எதிர்கின்றனர். காரணம், அமைச்சர்களுக்கு எதிரான ரெய்டுகள், வழக்குகள் என இமேஜ் சம்மந்தப்பட்ட சிக்கல்களை உருவாக்கியுள்ள சூழலில் பாஜகவுடன் கூட்டணி எனில் அது பொருந்தாத கூட்டணியாக விமர்சிக்கப்படும் என்பதால்தான். இதனைத்தான் எம்.பி.க்கள் பலரும் எங்களிடம் சொல்லி வருகின்றனர். இருப்பினும், அவர்களை சம்மதிக்க வைத்து கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள வைக்கிறோம். 

 

ஆனால், ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் சீட் ஒதுக்கப்படும். இதற்கு சம்மதம் எனில், எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.பி.க்களை சம்மதிக்க வைக்க முடியும் என எடப்பாடி சொல்லியனுப்பிய தகவல்களை ஒப்புவித்துள்ளனர் அமைச்சர்கள். அதற்கு நிர்மலா சீதாராமனோ, தலைமைக்கு இதனை தெரிவித்துவிடுகிறேன் என்பதை மட்டும் சொல்லி அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார் " என்று டெல்லியில் நடந்தவைகளை விவரிக்கிறது அதிமுக தரப்பு.

 

சார்ந்த செய்திகள்