Skip to main content

விவசாயி தற்கொலையின் போது பணியில் இருந்த அனைத்து காவலர்களையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் - முதல்வருக்கு விவசாய சங்கம் கோரிக்கை

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

 All policemen who were on duty at the time of farmer's suicide should be dismissed-Shanmugam's request to the CM

 

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்தில் விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பணியிலிருந்து அனைத்து காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்ய வேண்டும். விவசாயி பாண்டியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

குள்ளலக்குண்டு ஊராட்சி கன்னிமார் நகருக்கு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தலைவர்கள் விவசாயி பாண்டியின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பி.சண்முகம் பேசும்போது, ''அம்மையநாயக்கனூர் அருகேயுள்ள கன்னிமார் நகரைச் சேர்ந்த பாண்டி. அவரது குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் சிறுமலை அடிவாரத்தில் உள்ளது. அவரது நிலத்தை அபகரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஜி. பாலசுப்ரமணியம் தோட்டத்தில் வேலை செய்யும் பழைய வத்தலகுண்டை சேர்ந்த சங்கர், பள்ளப்பட்டியைச் சேர்ந்த நாச்சியப்பன் பொட்டிசெட்டிபட்டியைச் சேர்ந்த சின்னக்கருப்பன் அடையாளம் தெரியாத இன்னொருவர் ஆகியோர் அவரது நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் செயல்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாண்டி புகார் கொடுத்தும் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகலட்சுமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து வழக்கு பதிய வேண்டும் என்று நிலக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திலும் பாண்டி புகார் அளித்தார்.

 

இந்நிலையில் பாண்டியை விசாரிக்க காவல்நிலையத்திற்கு வரவழைத்த ஆய்வாளர் சண்முகலட்சுமி பாண்டியை கேவலமாக பேசியதையடுத்து காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா முன்பாக விவசாயி பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆய்வாளர் சண்முகலட்சுமி உள்ளிட்ட காவலர்கள் அருகில் இருந்தும் விவசாயி பாண்டியை காப்பாற்றாததால் பாண்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நிலக்கோட்டை ஒன்றிய தலைவர்கள் செந்தில், சௌந்தரராஜன் மற்றும் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள் எம்.ராமசாமி, என்.பெருமாள் கன்னிமார் நகர் சென்று பாண்டியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவரும், சிபிஎம் மத்திய குழு உறுப்பினருமான பி.சண்முகம் புதனன்று பிற்பகல் பாண்டி குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

 All policemen who were on duty at the time of farmer's suicide should be dismissed-Shanmugam's request to the CM

 

இதனையடுத்து சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்தில் விவசாயி பாண்டி தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது காவல்நிலையத்தில் உள்ள ஆய்வாளர், காவலர்கள் உட்பட அனைவரும் அவரை காப்பாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் தற்கொலை செய்துகொள்ள இத்தகைய துயர முடிவை அவர் எடுப்பதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் பாண்டி கொடுத்த புகாரின் மீது நீண்ட நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததே காரணமாகும்.

 

நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்ற உத்தரவு பெற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்த உத்தரவை மதிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே பாண்டியின் மரணத்திற்கு முழுக்க முழுக்க காவல்துறை அதிகாரிகளும் அவர்களது மெத்தனப் போக்கும் அவரை கேவலமாகப் பேசி அவமானப்படுத்தியதும் ஓராண்டாக வழக்கு பதியாததும் தான். எனவே விவசாயி பாண்டியின் மரணத்திற்கு ஆய்வாளர் சண்முகலட்சுமி மற்றும் அன்றைய தினம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைத்து காவலர்களும் தான். ஒரு விவசாயி விஷம் குடித்து மரணப்படுக்கையில் இருக்கும் போது கூட கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இன்ஸ்பெக்டர் செல்போன் பேசிக்கொண்டு மனசாட்சியற்ற முறையில் நடந்து கொண்ட அந்த வீடியோ காட்சிகள் அனைவரையும் உலுக்கிய சம்பவமாக நாங்கள் பார்க்கிறோம்.

 

எனவே இவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இவர்கள் அனைவர் மீதும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு உள்ளிட்ட குற்றவழக்குகள் பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் கொண்டு வரும் புகார்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.

 

காவல்துறையை தன் வசம் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிவாரணமாக அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு உடனடியாக பாண்டியின் மகன் சதீஸ் கண்ணனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், பாண்டியின் நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை பாதுகாக்கவும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்த காலதாமதமும் கூடாது என்று கூறினார். இப்பேட்டியின் போது விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள் ராமசாமி, பெருமாள், சிபிஎம் ஒன்றிய தலைவர்கள் செந்தில், சௌந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்