Skip to main content

விவசாயத்துறை நிதிநிலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 01/08/2021 | Edited on 01/08/2021

 

Agriculture Finance - Chief Minister MK Stalin's Instruction!

 

நிதிநிலை அறிக்கை, விவசாயத்துறைக்கான முதல் நிதிநிலை அறிக்கை பற்றி அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (01/08/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. 

 

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர் பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.

 

மேலும், பொது நிதிநிலை அறிக்கையினை பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்டக் கருத்துகளை அடிப்ப்டையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க அமைச்சர் பெருமக்களையும், அரசு உயர் அலுவலர்களையும் அறிவுறுத்தினார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்