Skip to main content

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!- நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

Additional Chief Secretary to the Government of Tamil Nadu chennai high court

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருக்கும் வி.கே. சுரேந்திரநாத், சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.  

 

இந்த வழக்கை, அவரது சார்பாக  வழக்கறிஞர் பாலா டெஸ்சி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் வி.கே.சுரேந்திரநாத்‘ நான் பணியில் இருக்கும்போது உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் எனக்கு எதிராக சில கண்டன கருத்துகள் கூறப்பட்டன. இந்தக் கருத்துக்களை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தேன். இதை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு விசாரித்து, எனக்கு எதிராக உயர்நீதிமன்றம் கூறிய கண்டன கருத்தகளை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், காவல் துறையில் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. எனக்கு, அடுத்த கட்டமாக துணை கமிஷனர் என்ற பதவி உயர்வு அரசு வழங்க வேண்டும். எனக்கு எதிராக உயர்நீதிமன்றம் கண்டன கருத்து கூறியதால், இந்த பதவி உயர்வு வழங்க மறுத்தது தவறானது, சட்டவிரோதமானது. ஏற்கனவே, நீதிமன்றம் கண்டனத்தை ரத்து செய்ததால், எனக்கு பதவி வழங்க வேண்டும். எனக்கு பதவி வழங்காததால், நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீறியுள்ளது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கூறியிருந்தார்.  

 

இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (18/12/2020) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் நான்கு வாரத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் நேரில் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்