Skip to main content

விஷால் கடன் பெற்ற விவகாரம்: 'சக்ரா' படம் வெளியிடும் முன் பணத்தைச் செலுத்த பைனான்சியர் நோட்டீஸ்!

Published on 25/12/2020 | Edited on 25/12/2020

 

actor vishal chakra film financier notice

'சக்ரா' படத்தை வெளியிடுவதற்கு முன்பாக, தங்களுக்குத் தர வேண்டிய 58 லட்சத்து 35 ஆயிரத்தைச் செலுத்துமாறு, பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில் நடிகர் விஷாலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

கடந்த 2008- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்த படம் ஒன்றிற்காக, பைனான்சியர் விஜய் கோத்தாரி என்பவரிடம், விஷால் 50 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

 

ஆறு வருடங்கள் கழித்து, கடந்த 2015- ஆம் ஆண்டு, பணத்தைத் தருவதாக உத்தரவாதம் அளித்த நிலையில், அப்போது தராமல், அதன் பின்னர் 2018- ஆம் ஆண்டு, சண்டக்கோழி 2 பட வெளியீட்டின் போது, பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு கூறி, 50 லட்ச ரூபாய்க்கான காசோலையை பைனான்சியரிடம் விஷால் கொடுத்துள்ளார்.

 

அதன் பின்னரும் விஷால் பணத்தைத் தராமல், தொடர்ந்து இழுத்தடித்த நிலையில், பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த நீதிமன்றம், 50 லட்ச ரூபாயை 9 சதவீத வட்டியுடன் பைனான்சியருக்குச் செலுத்துமாறு, கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், விஷாலுக்கு உத்தரவிட்டது.

 

நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வருடம் ஆகியும், விஷால் பணத்தைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படம் வெளியாவதால், பைனான்சியர் விஜய் கோத்தாரி சார்பில், அவரது வழக்கறிஞர் மூலம், நடிகர் விஷால் மற்றும் ஓ.டி.டி. தளங்களான பி4U டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட், டிஸ்னி ஹாட் ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், Zee 5, அமேசான் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..

 

அந்த நோட்டீஸில், படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிடுவதற்கு முன்பாக, விஷால் தங்களுக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை விஷாலுக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்