திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் இந்திய அளவில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் கிரிவலத்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள் என்றால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஐீ பொன்மாணிக்கவேல், நீதிமன்றத்தில், பிரிவில் உள்ள அதிகாரிகளை அரசாங்கம் மாற்றுகிறது என குற்றம்சாட்டினார். எதிர்கட்சிகள் ஆளும்கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்தன.
அதோடு விடாத பொன்மாணிக்கவேல், தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட, கடத்தப்படும் கோயில் சிலை கும்பலுடன் தேசிய கட்சியின் தமிழக பிரதிநிதி ஒருவருக்கு தொடர்பு உள்ளது எனச்சொல்ல அது யார் என பெரும் விவாதமானது. பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா, அது நான் இல்லை என வாலண்டரியாக வந்து மறுத்தார்.
அந்த நேரத்தில் தமிழக கோயில்களில் உள்ள சிலைகளில் 80 ஆயிரம் சிலைகள் போலி என தெரிவித்தார். மற்ற குற்றச்சாட்டுகளை விட இந்த குற்றச்சாட்டு பெரியதாகாமல் அமுக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு பின் தமிழக கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள், பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி நடைபெற்றுவருகின்றன.
அண்ணாமலையார் கோயிலுக்கென 1957ல் ஐம்பொன்னால் ஆனா ஒரு அடி உயரம்முள்ள பாலதண்டராயுதபாணி சிலையும், 2 அடி உயரம்முள்ள சூலமும் காணிக்கையாக தரப்பட்டுள்ளதாக கோயில் கணக்கேடுகள் தெரிவிக்கின்றன. 1962ல் கோயில் பதிவேட்டில் அந்த பொருட்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளன.
அதன்பின் 1976லும், 2002லும், கடைசியாக கடந்தாண்டு கணக்கீடு எடுத்தபோது அந்த சிலை மற்றும் சூலம் பற்றிய தகவல் பதிவேட்டில் இல்லாமல் இருப்பதை அண்ணாமலையார் கோயில் பாதுகாப்பில் உள்ள சிலைகள், நகைகள், பொக்கிஷங்களை தொல்பொருள்துறை ஆய்வாளர், கணக்கீட்டாளர் முன்னிலையில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் ஆய்வு செய்தபோது கண்டறிந்துள்ளார்.
இதுப்பற்றி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தவர், மேல்அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னியிடம் புகார் தெரிவித்துள்ளார். புகார் தெரிவித்தபின்பே இந்த விவகாரம் வெளியே வந்து பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு இருந்த அதிகாரிகள் காணாமல் போனது தொடார்பாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?, 10 வருடங்களுக்கு முன்புவரை அண்ணாமலையார் கோயிலுக்கு என அறங்காவலர் குழுக்கள் இருந்தது. அவர்களும் ஏன் இதனை வெளிப்படுத்தவில்லை?. சிவாச்சாரியர்கள் ஏன் தெரியப்படுத்தவில்லை. கோயிலுக்குள் இருந்த சிலை திருடு போனது எப்படி?, இந்த திருட்டுக்கு யாரெல்லாம் உடந்தை என்பதை கண்டறிய வேண்டும் என வேண்டுக்கோள் விடுக்கின்றனர் பக்தர்கள்.
ஓராண்டுக்கு முன்பு கோயில் உண்டியலை எண்ணும்போது, அதை வீடியோவில் பதிவு செய்யச்சென்ற ஒரு வீடியோகிராபர் பணம் திருடி மாட்டிக்கொண்டார். அதில் அப்பாவி போட்டோகிராபர் ஒருவர் மாட்டவைத்துவிட்டு முக்கியமானவர்கள் தப்பிவிட்டனர் என்கின்றனர் கோயில் ஊழியர்கள். அண்ணாமலையார் கோயில் சொத்துக்கள் திருடு போவது புதிதல்ல. ஆவணத்தில் உள்ளதால் இது தெரியவந்தது. மற்றவை தெரியவரவில்லை என்றும் கூறுகின்றனர்.