புயல் மற்றும் நகர்புற வெள்ளம் என்கிற தலைப்பில் சென்னையில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக தலைமைச்செயலர் சண்முகம், மத்திய அரசை சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரிடர் காலங்களில் தமிழகமும் தமிழக அரசும் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசிய சண்முகம், "தமிழகம் சந்தித்த அனைத்து பேரிடர்களும் சிறந்த அனுபவங்களை கொடுத்துள்ளன. சென்னையில் 2015 ல் ஏற்பட்ட மழை வெள்ளம் நீண்ட கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வைக்கும் படிப்பினை தந்துள்ளன.
பேரிடர் உள்ளிட்ட காலங்களில் மத்திய அரசு செய்யக்கூடிய உதவிகள் போதுமானதாக இருப்பதில்லை. இதுபோன்ற காலங்களில் மாநில அரசு எதிர்ப்பார்க்கக்கூடிய உதவிகளையும் மத்திய அரசு செய்வதில்லை" என சுட்டிக்காட்டினார். தலைமைச்செயலாளரின் இத்தகைய பேச்சு, எதார்த்த நிலையை உணர்த்துவதாக இருந்தாலும், மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு வைப்பது போல பேசியிருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.