Skip to main content

தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 9 லட்சம் ரூபாய் திருட்டு; மர்ம நபர்கள் அட்டகாசம்!

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

9 lakh theft at private IAS training center; Mystery figures abound!

 

சேலத்தில், தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்து மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 9.28 லட்சம் ரூபாய் மற்றும் செல்போனை திருடிச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் சூரமங்கலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. சேலம் கன்னங்குறிச்சி டி.கே.வெங்கடாசலம் தெருவைச் சேர்ந்த திலக்ராஜ் (வயது 42) என்பவர், இந்த பயிற்சி மையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) காலை வழக்கம்போல் பயிற்சி மையத்திற்குச் சென்று பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது அலுவலக செலவிற்காக பணம் தேவைப்பட்டதால், தனது மேஜை டிராயரை திறந்துள்ளார். 

 

ஆனால் டிராயரில் வைத்திருந்த 9.28 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு செல்போன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்கள் அவற்றை திருடிச்சென்றிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திலக்ராஜ், சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை உதவி ஆணையர் நாகராஜன், ஆய்வாளர் கந்தவேல் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினர். 

 

ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் பூட்டு உடைக்கப்படாமல் இருந்தது. மேலும், மேற்கூரை வழியாக திருடர்கள் வரவும் வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த காவல்துறையினர், பயிற்சி மையத்தின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி நன்கு தெரிந்தவர்கள்தான் போலி சாவி தயாரித்து, பூட்டை திறந்து, சாவகாசமாக உள்ளே சென்று பணம், செல்போனை திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

 

சம்பவத்தன்று, அந்த பயிற்சி மையத்திற்குள் வந்து சென்ற மர்ம நபர்கள் குறித்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை சேகரித்து, ஆய்வு செய்து வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்